9,907 Views
தமிழ் சினிமாவின் சாதனை நாயகர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதர் என திரையுலகினரிடமும் சரி.. ரசிகர்கள் மத்தியிலும் சரி பெயரெடுத்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த ஒரு சிலரில் வாழ்ந்து மறைந்த நட்சத்திரங்களோடு, தற்போது திரையில் மின்னி ஜொலிக்கும் நட்சத்திரமும் இணைவதில் பெருமை. அந்தப் பெருமைக்கு உரியவர் வேறு யாருமல்ல, இன்றையதினம் பிறந்தநாள் காணும் "தல" அஜித் தான்.
'தல' என்று ரசிகர்கள் அன்பாகத் தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அஜித்குமார் சுப்ரமணி, 44வது அகவையில் இன்றையதினம் கால் பதிக்கிறார். முதன்முதலாக "பிரேம புஸ்தகம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் துணை நடிகராகத்தான் இவரது சினிமா பிரவேசம் அமைந்தது. இருந்தும் தமிழ்த் திரைத்துறையில் தான் ஜொலிக்க வேண்டும் என்றே இவர் தலையில் எழுதப்பட்டிருந்தது போலும்.

தமிழ்த் திரைத்துறையில் தடம் பதித்தும், நின்று நிலைப்பது என்பது 'தல'யைப் பொறுத்தவரையில் அவ்வளவு எளிதாக அமையவில்லை என்பதே நிஜம். "அமராவதி"யில் ஆரம்பித்தாலும் "ஆசை" தான் ரசிகர்களிடம் அவரை ஆசையைக் கொண்டு சேர்த்தது. தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கமும், தொடர் தோல்விகளால் துவண்டாலும் தூக்கி நிறுத்த திரைத்துறைப் பின்புலம் கொண்ட நடிகர்களுக்கும் மத்தியில் தன்னை நிலைநிறுத்த பெரும் போராட்டங்களை எதிர்கொண்ட நாயகன் இவர் என்றால் மிகையல்ல.
சாதனை நாயகர்களாகவும், திரையில் மாஸ் ஹீரோக்களாகவும் வலம் வரும் ஒரு சில நட்சத்திரங்கள் ஏழைகளின் மீட்பர்கள் போலவும், அவர்களுக்காகவே வாழ்வது போலவும் திரையில் மட்டுமே காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், நிஜத்தில் திரைக்குப் பின்னால் எத்தனையோ திரைத்துறை சார்ந்த தொழிலாளர்கள் படும் கஷ்டங்களைக்கூட கண்டுகொள்வதே இல்லை. இவ்வாறானவர்களுக்கு மத்தியில், தனக்கு நிகராக எல்லாரையும் மதிக்கும், அவர்களின் கஷ்டங்களில் பங்கெடுக்கும், அவர்களை உண்மையாய் நேசிக்கும் ஒருவராய் திரைத்துறை சார்ந்த தொழிலாளர்களின் மனங்களிலும் வாழ்கிறார் 'தல'.

"பத்து மாடி வீடு கொண்ட சொத்து சுகம் வேண்டாம்... பட்டங்களை வேண்டித் தரும் பதவியும் வேண்டாம்.." என தங்கள் திரைப்பட பாடல்களில் சொல்லிச் சொல்லியே சொத்துச் சேர்த்தவர்களுக்கு மத்தியில், ரசிகர்கள் அன்பாகத் கொடுத்த "அல்டிமேட் ஸ்டார்" என்ற பட்டத்தையே வேண்டாம் என அன்பாய் மறுத்து ஒதுக்கியவர் இவர். எதிர்கால அரசியலுக்காய் ரசிகர்களையும், தன் ரசிகர் மன்றங்களையும் பயன்படுத்துகின்ற, திரையில் நடித்துப் பழகும் சில நடிகர்களுக்கு மத்தியில் அரசியலே வேண்டாம் என்றும், அரசியல் கலந்த காரணத்தால் தன் ரசிகர் மன்றங்களையே இல்லாமல் செய்த ஒருவரும் இவர் என்றால் தவறில்லை.
எந்த மொழி சார்ந்த சினிமாவை எடுத்துக் கொண்டாலும், பிரபலமான ஒரு ஹீரோவுக்கு திரைத்துறை சாராதவர்களே பொதுவாக ரசிகர்களாய் இருப்பது தான் வழமை. ஆனால் அஜித்தைப் பொறுத்தவரை, தமிழ் கடந்து தென்னிந்திய, வடஇந்திய சினிமாவில் பிரபல ஹீரோக்களாக வலம் வரும் நட்சத்திரங்களே ரசிகர்களாக இருப்பது தான் ஆச்சரியம். அதற்கு மகுடம் வைப்பது போல நடிகர் சிம்பு வித்தியாசமானதொரு பிறந்தநாள் பரிசை வழங்கியிருக்கிறார் தன் ரசனைக்குரிய ஹீரோ 'தல' அஜித்திற்கு.
சிம்புவின் நடிப்பில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த "இது நம்ம ஆளு" படத்தை தன் முன்மாதிரி என்று சிம்பு கொண்டாடும் 'தல'யின் பிறந்த நாளான இன்றையதினம் வெளியிட விரும்பினாராம் சிம்பு. இருந்தும் உத்தமவில்லன், வை ராஜா வை ஆகிய படங்கள் இன்றையதினம் வெளியாவதால் "இது நம்ம ஆளு" வெளியாவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிம்பு கவலை அடைந்தாலும், தன் தலைவனின் பிறந்தநாளுக்கு பரிசாக ஏதேனும் கொடுத்து பெருமைப்பட வேண்டும் என்ற காரணத்தினால் "வாலு" படத்தின் முன்னோட்டக்காட்சியை வெளியிடுகின்றார் சிம்பு.

வெள்ளித்திரை கடந்து வேறு துறைகளிலும் சாதிக்கத் துடிக்கும் ஒருவர் என்றே சொல்லலாம் இந்தச் சாதனை நாயகனை. ஏனெனில்,விமானம் செலுத்துவதற்க்கான அனுமதிப்பத்திரம் கொண்ட ஒரேஒரு திரை நட்சத்திரம் இவரே என்பதோடு, உலகத் தரத்திலான காரோட்டப் பந்தயத்தில் பங்குபற்றும் ஒரு சிறந்த காரோட்டப் பந்தய வீரரும் கூட. தன்னம்பிக்கையை மட்டுமே தனித்துவமாய்க் கொண்ட இந்த 'தல', தீயில் எரிந்தாலும் திரும்பவும் எழுந்து வரும் பீனிக்ஸ் பறவை தான் என்றால் தவறில்லை.
எது எப்படியோ, அமராவதியில் ஆரம்பித்த நதி என்னை அறிந்தால் மூலம் தன்னை அறியவைக்கும் வரையில் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டது எனலாம். எத்தனையோ தடைகள், எவ்வளவோ சோதனைகள்,வேதனைகள். அத்தனையையும் தாண்டி, பின்புலமோ, பிடிமானமோ ஏதுமற்ற சிகரம் நோக்கிய சாதனைப் பயணம் இன்று "சூப்பர்ஸ்டார்" பட்டம் என்னும் சிம்மாசனம் நோக்கி…........
இந்த இனிதான நாளில் மென்மேலும் கனவுகள் வென்று, சாதனைகள் கடந்து, சிகரம் தொட்டு உயர்ந்திட மனமார வாழ்த்திடுவோம்.
*கணேசமூர்த்தி ராகவன்.