கோலிவுட்டில் சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, போன்ற நல்ல ஹிட்ஸ் படங்களை கொடுத்து வரும் நடிகர் விமல், தற்போது ரெண்டாவது படம், அஞ்சலை, காவல், மாப்பிள்ளை சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விமல் தற்போது பூபதி பாண்டியன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, பட்டத்து யானை போன்ற காமெடியுடன் கூடிய ஆக்சன் படங்களை இயக்கிய பூபதிபாண்டியன் இயக்கும் கமர்ஷியல் படத்தில் விமலுக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யராஜின் நக்கலான காமெடி இந்த படத்திலும் இடம்பெறும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறவுள்ளது. இந்தப் படத்திலும், இன்னும் வரவுள்ள படங்களிலும் விமலின் உயரம் இன்னும் அதிகமாகப் போகிறது !
-கோடம்பாக்கக் குருவி-