ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலின் பின்னர் இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே மிகக்கடுமையான அரசியல் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகள் வீசி, பெரும் தாக்குதல்கள் நடத்தி இருந்தன. இந்த நிலையில்,பாகிஸ்தானில் இந்தியா சம்மந்தப்பட்ட அனைத்திலுமே எதிர்ப்புகள் கிளம்பின.
பல்வேறுபட்ட தடைகளும் இரு நாடுகளும் மாறி மாறி விதித்துவந்தன. இதையடுத்து, இந்திய படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை மந்திரி சவுத்ரி ஃபவாத் ஹூசைன் அறிவித்துள்ளார். இது மாத்திரமன்றி இந்திய விளம்பரங்கள் அனைத்தையுமே புறக்கணிக்கவும் பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அனைத்து இந்திய திரை பட தொழிலாளர் சங்கம், இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த திரைப்பட கலைஞர்களும் பணியாற்ற முடியாது என்று தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த காரசார நிலையில் இன்னும் பல அதிரடி அறிவிப்புகளை இரண்டு நாடுகளும் மாறி மாறி விதிக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.