இந்திய விமானி அபிநந்தன் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன், வாகா எல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.
மாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் வாகா என்னும் பகுதிக்கு அபிநந்தன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபிநந்தன் இன்று விடுதலையாகின்றார் என்ற செய்தியை கேட்ட மக்கள், அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் காத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு தொகுதி மக்கள் தேசிய கொடிகள் மற்றும் மலர் மாலைகளுடன் அவரை வரவேற்பதற்கு திரண்டு உள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இந்திய விமானி அபிநந்தன் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி அறிவித்துள்ளார்.
விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டும் என்று உலகம் முழுவதும் கோஷங்கள் ஒலிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் அபிநந்தன் தொடர்பான செய்திகளே வெளியாகிய வண்ணம் உள்ளன.
முன்னதாக சென்னையில் இருந்த அபிநந்தனின் பெற்றோர் நேற்று இரவே டெல்லிக்கு சென்றுள்ளார்கள். அபிநந்தனின் குடும்பம் 3 தலைமுறையாக, ராணுவத்தில் இருந்துள்ள விடயமும் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று லாஹுரில் பாகிஸ்தானியர்கள் பதாகைகள் வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளன. அத்துடன் பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும் ’போர் வேண்டாம்’ என்ற பதாகைகளை ஏந்தியபடி லாகூர் பத்திரிகையாளர் மன்றத்துக்கு முன் ஒன்றுகூடி உள்ளார்கள்.
இதேநேரம், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்கும் பாகிஸ்தான் அரசின் முடிவு வரவேற்கக் கூடியது. அதேசமயம், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது, நிதியுதவி அளிப்பது போன்றவற்றை தடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இது இவ்வாறு இருக்க காஷ்மீரில் நடக்கும் எல்லாவற்றுக்கும் பாகிஸ்தானை எத்தனை காலம் பழி சுமத்த முடியும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை முன் வைத்துள்ளோம். ஆனால் இந்தியத் தரப்பிலிருந்து வரும் செய்திகள் நல்ல விதத்தில் இல்லை.
இந்திய மக்கள் தற்போதுள்ள அரசின் போர் பற்றிய தூண்டுதலை ஆதரிக்கவில்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் மோதல் எல்லாவற்றுக்கும் காரணம் காஷ்மீர். நான் இந்திய மக்களிடம் கடந்த நான்கு வருடங்களாக காஷ்மீரில் நடந்து வரும் போர்சூழல் குறித்து கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். காஷ்மீரில் உள்நாட்டுப் போராட்டம் நடந்து வருகிறது. காஷ்மீர் தலைவர்கள் ஒருகட்டத்தில் இந்தியாவிலிருந்து பிரிவினையை கேட்கவில்லை.
ஆனால், இந்தியா இழைத்த கொடுமைகள் காரணமாக அவர்கள் இப்போது சுதந்திரம் கேட்கிறார்கள். ஏன் 19 வயது இளைஞர் மனித வெடிகுண்டாக மாற வேண்டும்? என்றும் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்கள் மோதலை விரும்பவில்லை என்று தெரிவிக்க இந்திய பிரதமர் மோடிக்கு நேற்று மாலையிலிருந்து தொலைபேசியில் முயற்சித்தேன்......'' என்றும் இம்ரான் கான் மேலும் தெரிவித்தார். மற்றொருபுறம் புல்வாமாவில் தாக்குதல் மேற்கொண்ட ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார், ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை CNN செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி ஒப்புக் கொண்டுள்ளார்.
மசூத் அசார் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. அதேசமயம் புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா தரப்பில் உறுதியான ஆதாரங்களை தந்தால், அது பாகிஸ்தான் நீதிமன்றம் ஏற்கும் வகையில் இருந்தால் நாங்கள் மக்களை சமாதானம் செய்ய முடியும்.
அதேசமயம் மோதலை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் எப்போதுமே தயாராக உள்ளது. அவர்களிடம் உறுதியான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். பேச்சுவார்த்தையில் தமது தரப்பில் உள்ள நியாயங்களை தெளிவுபடுத்த முடியும்.
பேசசுவார்த்தைக்கு பின்னரே அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்’’ என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி குறிப்பிட்டுள்ளார்.