ஆண்டு தோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த மொடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான 21 வயதேயுடைய "கெய்லி ஜென்னர்" (Kylie Jenner), சுய சம்பாத்தியத்தில் வளர்ந்த உலகின் இளம் செல்வந்தர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ், இந்த வருடமும் உலக பணக்காரர்கள் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் அமெரிக்காவை சேர்ந்த மொடல் அழகி கெய்லி ஜென்னர், இளம் பணக்கார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
கெய்லி ஜென்னர் கடந்த 2016-ம் ஆண்டில் தனது பெயரில் ஆரம்பித்த அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று லாபங்களை அள்ளிக்கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் கெய்லி ஜென்னரின் சொத்தை மதிப்பீடு செய்ததில் சுமார் 100 கோடி அமெரிக்க டொலர் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே இந்திய வம்சாவளியான பிரபல மொடல் அழகி ''கிம் கர்தாசியான்'' கெய்லி ஜென்னரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் மொத்தம் 106 இந்திய கோடீஸ்வரர்கள் இடம் பிடித்துள்ளார்கள்.
சர்வதேச அளவில், அமேசான் நிறுவனத்தலைவர் ஜெப் பெசாஸ் 131 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு 19 வது இடத்தில் இருந்து முகேஷ் அம்பானி, இந்த வருடம், 50 பில்லியன் டொலர் சொத்துடன், 13 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதே போல், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸ், 96 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
வாரன் பஃபெட் 82 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன், 3 வது இடத்திலும் உள்ளார். பேஸ்புக் நிறுவனத்தலைவர் மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட, 17 சதவிகிதம் சரிந்து, 62 பில்லியன் டொலராக உள்ளதால், அவர் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.