இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது வரைக்கும் தவிர்க்க முடியாத ஒரு பெயரும், பொதுவான கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் மதிப்புடன் கூடிய உயர்ந்த இடம்பிடித்த ஒரு சிறந்த கிரிக்கெட் நட்சத்திரம் என்றால் அது மகேந்திரசிங் டோனி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், சிறந்த துடுப்பாட்ட வீரரும், இந்தியாவிற்கு இரண்டு உலகக் கிண்ணங்களை வென்று கொடுத்த ஒரேயொரு அணித்தலைவரான மகேந்திரசிங் டோனி, எதிர்வரும் உலகக் கிண்ணத்துடன் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் பக்கமிருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அதை உறுதிப்படுவதுபோன்று மஹேந்திரசிங் டோனியை கௌரவப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது, உலகக் கிண்ணத்துக்கு முன்னரேயே எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்துவிடுவாரோ என்று கவலைப்பட ஆரம்பித்துள்ளனர் டோனி விசிறிகள்.
இது இப்படியிருக்க, மஹேந்திரசிங் டோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட்டில் உள்ள ராஞ்சி மைதானத்தின் வடக்கு பக்கமாகவுள்ள பெவிலியனுக்கு எம்.எஸ்.டோனி என்று பெயர் பொறித்து அவரை கௌரவப்படுத்த 2017ம் ஆண்டே ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் வைத்து முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில், அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் ராஞ்சி மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறும் 3வது சர்வதேச ஒருநாள் போட்டியின்போது மஹேந்திரசிங் டோனியின் கரங்களால் குறித்த பார்வையாளர் அரங்கை திறந்து வைப்பதற்கு ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் ஆசைப்பட்டது.
இருந்தும் அவர்களது கோரிக்கையை அன்பாக மறுத்துவிட்ட மஹேந்திரசிங் டோனி, ‘‘இந்த மைதானத்திற்குரியவர்களில் நானும் ஒரு அங்கத்துவமாக உள்ளேன். இது எனது வீடு. எனது வீட்டை நானே திறந்து வைப்பது அழகல்ல" என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான தனது மறுப்பிற்கான காரணத்தையும் தன்னடக்கத்துடன் சிறப்பாக முன்வைத்தார். அதனால், ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கமே அந்த அரங்கை திறந்து வைத்துள்ளது. இந்தநிலையில், இன்றைய போட்டி நடைபெறும்போது இரண்டு அணிகளின் வீரர்களும் தமது உடை ஓய்வு அறையில் இருந்து பார்க்கும்போது மகேந்திரசிங் தோனியின் பெயர் கம்பீரமாக ஜொலிக்கும் வகையில் காட்சியளிக்கவுள்ளது.
இதேவேளை, மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள பார்வையாளர் அரங்கின் ஒரு பகுதிக்கு சுனில் கவாஸ்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பக்க நுழைவுவாசலுக்கு விரேந்தர் சேவாக் பெயர் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.