சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் "The World's Best " நிகழ்ச்சியில் 1 மில்லியன் டொலர் பரிசுத் தொகையை வென்று, உலக இசை ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்கக் வைத்துள்ளார்.
ஹாலிவுட் தொகுப்பாளரான ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்கும் "The World's Best " என்ற பொழுது போக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் குழுவாகவும் , தனி நபராகவும் கலந்து தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பியானா கலைஞரான லிடியன் நாதஸ்வரமும் என்ற சிறுவன் கலந்து கொண்டார். சிறுவன் லிடியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரம்பம் முதல் தனது அசாத்திய திறமையால் ரசிகர்கள் பலரின் அமோக வரவேற்பை பெற்று வந்தார். இதன் காரணமாக லிடியன் இன்னும் ஒரு படி மேலே சென்று பிரபல ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்சிகளான எலன் ஷோ உள்ளிட்டவைகளில் கலந்து அசத்தியுள்ளார்.
லிடியனின் திறமையை அவதானித்த இசைப்புயல் ரஹ்மான் உள்ளிட்ட இசை அமைப்பாளர்கள் லிடியனுக்கு நேரடியாகவும் தொலைபேசி மற்றும் சமூக வலைத் தளங்கள் மூலமாகவும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துளார்கள். இந்த நிலையில் "The World's Best " நிகழ்ச்சியில் பங்கேற்ற லிடியன் நாதஸ்வரம் அனைவரையும் பின்னுக்கு தள்ளி சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இசை கலைஞர்களை மகிழ்வித்து, பட்டத்தை வென்ற லிடியனுக்கு 1 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.