தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் 'தளபதி' விஜய் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் நிலையில், நடிப்போடு மட்டும் நின்று விடாமல் தனது எதிர்காலக் கனவான அரசியல் பிரவேசத்திற்கான அடித்தளத்தையும் மிக உறுதியாகக் கட்டமைக்கும் வேலையையும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கின்றார்.
மே மாதம் முதலாம் திகதியன்று கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் தனது பிரத்தியேக செலவில் நடிகர் விஜய் தொழிலாளர்களுக்கு விருந்து கொடுத்து பரிசுப் பொருட்களும் வழங்கி அவர்களை மகிழ்விப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்.
இந்த நிலையில், கடந்த முதலாம் திகதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டபோதும் 'தளபதி' விஜய் உழைப்பாளர்களுக்கு வழங்கும் விருந்து நிகழ்வு அன்றையதினம் நடைபெற்றிருக்கவில்லை. காரணம், இந்திய பொதுத் தேர்தல் வாக்களிப்பு கட்டம் கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் குறித்த விழாவை முன்னெடுக்க முடியாமல் போயிருந்ததாக விஜய் மக்கள் இயக்கம் விளக்கம் கொடுத்திருந்தது.
இந்தநிலையில், ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் குறித்த விழா, விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றதுடன் எதிர்கால வாக்காளர்களாக தொழிலாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வேலைத்திட்டம் 'தொழிலாளர் கௌரவிப்பு' என்ற பெயரில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இருந்தும், தளபதி விஜய் நிகழ்வில் பங்கெடுத்திராமையால் ரசிகர்களான தாம் ஏமாற்றமடைந்ததாக நிகழ்வில் பங்கேற்றவர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.
இது பற்றி விஜய் மக்கள் மன்றம் குறிப்பிடுகையில், தளபதி விஜய் தனது திரைப்படப் படப்பிடிப்பு வேலையில் மும்முரமாக உள்ளதால் அவரால் குறித்த விழாவில் பங்கேற்க முடியாமல் போயிருந்தது. இருந்தும், இந்த விழாவை மேலும் காலதாமதமாக்காமல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் தான் அவரது உத்தரவின் பேரில் நேற்று இந்த விழாவினை ஏற்பாடு செய்யப்பட்டது எனது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன்,எமது மாநில பொறுப்பாளர் புஸ்ஸி N.ஆனந்த் தலைமையேற்று இந்த விழாவை நடத்துமாறு 'தளபதி' விஜய் உத்தரவிட்டதன் காரணமாக, முச்சக்கரவண்டிச் சாரதிகளாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய விருந்துடன் கூடிய பரிசுப் பொருட்களை மன்றத்தின் மாநிலப் பொறுப்பாளர் வழங்கி கௌரவித்தார் என்றும் விளக்கம் வழங்கினார்கள் விஜய் மக்கள் மன்றத்தினர்.