அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி, பெரும் வசூல் சாதனைப் படைத்த தமிழ்த்திரைப்படங்களில், காஞ்சனாவும் ஒன்று.
கடந்த 2011 ஆம் ஆண்டு, ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரே நடித்து திரைக்கு வந்த காஞ்சனா திரைப்படம் மிகப்பெரும் வசூலை அள்ளியது. இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தற்போது இந்தியில் ‘'லட்சுமி பாம்'’ என்ற பெயரில் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அக்ஷய் குமார் நாயகனாகவும், கியாரா அத்வானி நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் இயக்குனராக ராகவா லாரன்ஸே ஒப்பந்தமாகினார்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் இடம்பெற்று வந்த நிலையில், படத்தின் முதல் தோற்றத்தை அக்ஷய்குமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். எனினும் இந்த படத்தை லாரன்ஸுக்கு தெரியாமலும், அவரிடம் ஆலோசிக்காமலும் வெளியிட்டதாக செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து காஞ்சனா இந்தி படத்தில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில். “மதியாதார் வாசலை மிதியாதே என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த உலகத்தில் பணம், புகழை தாண்டி மரியாதை முக்கியம். அதனால் லட்சுமி பாம் படத்தில் இருந்து விலகுகிறேன். படத்தின் இயக்குனரான எனக்கு தெரியாமல், முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். இதை அவமரியாதையாக கருதுகிறேன்” என்று கூறினார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் படக்குழுவினர் மும்பையில் இருந்து சென்னை வந்து ‘'லட்சுமி பாம்'’ படத்தை தொடர்ந்து இயக்குமாறு ராகவா லாரன்ஸிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது. இதனை அடுத்து ''லட்சுமி பாம்'' படத்தை மீண்டும் இயக்குவதாகவும், தனது உணர்வுகளை புரிந்து கொண்ட அக்ஷய் குமாருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் தளத்தில் பதிவிட்டுள்ளார்.