தமிழகத்தில் உள்ள பிரபலமான வாரப் பத்திரிகை ஒன்று (குமுதம்) அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற ஒரு பெரிய கருத்துக் கணிப்பொன்றை மேற்கொண்டது, பெரும்பான்மையான வாக்குகள் இளைய தளபதி விஜய்க்கு கிடைத்தன. இப்பத்திரிகை நிறுவனத்திற்கு இளைய தளபதி நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது பற்றி பெரிய சர்ச்சைகள் எழுந்து குறித்த வாரப் பத்திரிக்கைக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடத்த, ஏனைய நடிகர்களின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களில் விஜயைக் கலாய்க்க, விஜய் தானாக " இளைய தளபதி என்ற ரசிகர்கள் வழங்கிய பட்டமே போதும். சூப்பர் ஸ்டார் என்பது வேண்டாம்" என்று அறிவித்தார்.
எனினும் வழங்கியது வழங்கியது தான் என்று விஜய் ரசிகர்கள் ஆசைப்பட, விஜயின் முக்கிய ரசிகர் மன்றங்களின் ஏற்பாட்டில், விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாராக தெரிவு செய்யப்பட்டு, பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது.
இப்பிரம்மாண்ட நிகழ்வு மதுரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். நாளை நடைபெறவிருந்த இந்நிகழ்வு திடீரென மத்திய அரசின் அனுமதி இல்லாததன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏனெனில் இந்தியாவின் சுதந்திர தினம் அன்றைய தினமாகையாலும், நாட்டை போற்றும் தினம் என்பதனாலும் என தகவல் வெளிவர, மேலும் பல திரையுலக நட்சத்திரங்கள் இதற்கு இணங்காத காரணத்தினாலும் என கூறப்பட்டிருந்தது.
35 வருட காலமாக சூப்பர் ஸ்டார் பட்டத்தையுடைய ரஜினிகாந்த் இன்னமும் உச்சத்தில் இருப்பதாலும், இன்னமும் படங்களில் நடிப்பதாலும் அப்பட்டத்தை மாற்ற வேண்டிய தேவை இல்லை எனவும் பலர் கூறியுள்ளனர்.
எது எவ்வாறிருப்பினும் இந்நிகழ்வு இன்னும் ஒரு திகதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே 'கத்தி' பட விவகாரம் ஏராளமான சிக்கல்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய்க்கு தொடர்ந்து சிக்கல்கள்.
மதுரைக்கு (மட்டுமல்ல விஜய்க்கும்) இன்னும் என்னென்ன சோதனை வருமோ?