செவ்வாய் என்பதன் மறுபெயர் 'மங்கள்' என்பது தான், யான் என்பது வாகனம் எனப் பொருள்படுகிறது.
இவ்விரு வார்த்தைகளையும் சேர்த்து '
மங்கள்யான்' என மங்களகரமாக பெயர்சூட்டப்பட்டு, இந்தியாவிலிருந்து கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் திகதி செவ்வாய்க்கு, ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது.
300 நாட்கள் என்ற திட்டகாலத்தைக் கொண்டு செவ்வாய்க்குச் சென்ற இந்த விண்கலமானது முற்றுமுழுதாக செவ்வாய் கிரகம் மற்றும் அதன் சுற்றுப்பாதையை பற்றி ஆராய அனுப்பப்பட்டதாகும். இது ஏவப்பட்ட நாளிலிருந்தே தன்னுடைய வேலையை கச்சிதமாக செய்துகொண்டிருந்தது. 1350 கி.கிராம் எடை கொண்ட இந்த விண்கலம் 10 மாதங்களின் பின் செவ்வாயை சென்றடையும் என இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.

அதே போன்று இன்று
மங்கள்யான் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நுழைந்தது. 4 கண்காணிப்பு மையங்களைக் கொண்டு அவதானித்து, இவ்விண்கலத்தை இயக்கி இன்று காலை 8 மணியளவில் செவ்வாய்க்கு செலுத்தி சாதனைப் படைத்துள்ளது இந்தியா. இதன் மூலம் செவ்வாய்க் கிரக சுற்றுப் பாதைக்குள் நுழைந்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஆனாலும் ஏனைய எல்லா நாடுகளையும் விட குறைந்த செலவிலும் முயற்சித்த முதல் தடவையே வெற்றியாக முடிந்ததிலும் இந்தியா பெருமிதம் கொண்டிருக்கிறது.

மங்கள்யானின் ஒவ்வொரு அசைவுகளையும் நாசாவும் கண்காணித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த சாதனையை முதலில் பாராட்டிய பெருமையும் நாசாவையே சாரும். ஆசியாவின் முதல் சாதனை என்பது மேலும் பெருமைக்குறிய விடயமாகும், இந்தியர்கள் அனைவரும் வெற்றிக்களிப்பிலுள்ளனர்.
நாமும் வாழ்த்துவோம்.