காதலியை கொலை செய்த ஒஸ்கார் பிஸ்டோரியஸ்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை.ஒஸ்கார் பிஸ்டோரியஸ் என்று அறியப்பட்ட தென்னாபிரிக்காவின் பிரபல தடகள வீரர் தன் காதலியை கொலை செய்தார் என்ற குற்றசாட்டில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பு வழங்கபட்டுள்ளது.
2012 ம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு கால்களும் இல்லாமல் கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இயற்கை கால்களுக்கு மத்தியில் இயல்பாய் ஓட தன் செயற்கை கால்களுக்கும் பழக்கம் கொடுத்து போட்டிகளில் பங்கெடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்தான் இந்த ஒஸ்கார் பிஸ்டோரியஸ்.

கடந்த 2013 ம் ஆண்டு காதலர் தினத்தன்று தன் காதலி ரீவா ஸ்டீன்கெம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார் ஒஸ்கார் பிஸ்டோரியஸ்.
வீட்டில் யாரோ திருடன் புகுந்துவிட்டான் என நினைத்து தவறுதலாக காதலியை சுட்டதாக முதலில் செய்தி வெளியானது. இவர் திட்டமிட்டு கொலை செய்ததாக பொலிசார் உறுதியாக இருக்க பிணைபெற முடியாமல் சிலகாலம் சிறையில் சிக்கித் தவித்தார்.
பின்னர் குறித்த வழக்கில் பிஸ்டோரியஸ் வீட்டில் ரத்தக் கறை படிந்த கிரிக்கெட் மட்டை கண்டு எடுக்கப்பட்டது. தவிர, ஸ்டீன்கெம்ப்பின் மண்டைஓடு பலமாக தாக்கப்பட்டிருந்தது, அவர் விழுந்து கிடந்த குளியலறைக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது என்று பிஸ்டோரியசுக்கெதிராக ஆதாரங்கள் சொல்லப்பட்டன.
இதைவிடவும் தடைசெய்யப்பட்ட போதைமருந்தை இவர் உட்கொள்பவர் என்பதோடு அன்று அதிகாலை அளவில் பிஸ்டோரியஸ் அளவுக்கு அதிகமாக மதுவருந்தி இருந்தாகவும் தெரியவந்தது.

கொலைசெய்யப்பட்ட ஸ்டீன்கெம்ப் தென்னாபிரிக்காவின் ரக்பி வீரர் பிரான்கோயிஸ் ஹக்கார்டின் முன்னாள் காதலி.பின்னர் ஹக்கார்டுடன் தொடர்பு கொள்வதை பிஸ்டோரியஸ் விரும்பவில்லை. சம்பவத்தன்று மாலை 6 மணிக்கு பிஸ்டோரியஸ் வீட்டுக்கு வந்த ஸ்டீன்கெம்ப் இவருடனேயே தங்கியுள்ளார்.
பிஸ்டோரியஸ்சுடன் தங்கியிருந்த தருணத்தில் முன்னை நாள் காதலனிடமிருந்த வந்த குறுந்தகவலால் ஆத்திரமடைந்த பிஸ்டோரியஸ் காதலியை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார்.அதன்பின் அவர் குளியலறையில் ஒளிந்து கொண்ட போது துப்பாக்கியால் தாக்கினார் என்றும் சந்தேகிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைகளின் போது தன் காதலியை தான் வேண்டுமென்றே கொலை செய்யவில்லை என்று கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவங்களுக்கு மத்தியில் இன்று இவர் குற்றம் நிரூபணமாகி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"Blade Runner"என்று எல்லோராலும் அறியப்பட்ட + பாராட்டப்பட்ட ஒரு திறமையான தடகள வீரனின் வேண்டாத,தீராத காதல்மோகம் அவன் வாழ்கையை இப்படி மாற்றிப் போட்டிருக்கின்றது.
இதுவும் கடந்து போகும்.
ஒலிம்பிக்கில் கால்பதித்து பரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் குவித்த இந்த தடகள ஓட்ட வீரன் இலக்கு இப்போது தடம் புரண்டாலும் மீண்டும் தடகளத்தில் தடம்பதிக்க வாழ்த்துவோம்.
*தில்லையம்பலம் தரணீதரன்