நடிகர் ஆர்யா மீது 1.80 கோடி ரூபாய் இந்திய மதிப்பிலான நிதி மோசடி புகாரின் அடிப்படையில் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல்நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் திரைப்பட உபகரணங்கள் வாடகைக்கு வழங்கும் நிறுவனம் அளித்துள்ள புகாரில், ‘அனந்தன் காடு’ திரைப்பட படப்பிடிப்பிற்காக உயர்தர கேமராக்கள், லென்ஸ்கள், லைட்டிங் சாதனங்கள், கிரிப் உபகரணங்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றுக்கான வாடகை மற்றும் சேவைக் கட்டணமாக 1.80 கோடி ரூபாய் நிலுவையில் இருந்தும், பலமுறை கோரிக்கை விடுத்தும் பணம் செலுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகப் பல கட்டங்களில் நேரடிப் பேச்சுவார்த்தைகள், சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இருப்பினும் தொகை கிடைக்காததால் காவல்துறையை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அந்த நிறுவனம் தனது புகாரில் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள், தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள், படக்குழுவினர் மற்றும் இந்த நிதி பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய பிற நபர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேவையெனில் நடிகர் ஆர்யாவிடமும் நேரில் விளக்கம் பெற போலீசார் சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.