76 Views
உள்காயம் ஏற்பட்ட உடனேயே அதிகமாக அசையாமல் ஓய்வு எடுப்பதுடன், முதல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் துணியில் சுற்றிய ஐஸ் கட்டியை காயம் பட்ட பகுதியில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுப்பது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். கை அல்லது காலில் காயம் ஏற்பட்டிருந்தால், அப்பகுதியை சற்று உயர்த்தி வைப்பதும் பயனுள்ளதாகும்.
அதேவேளை, வீக்கம் அதிகரிக்காமல் இருக்க மிதமான அழுத்தம் கொடுக்கலாம். எனினும், அடிபட்ட உடனேயே சூடான எண்ணெய் தேய்ப்பது, வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது அல்லது காயமடைந்த பகுதியை கடுமையாகத் தேய்த்து மசாஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக 48 மணி நேரத்திற்குப் பின்னர் வீக்கம் குறைந்திருந்தால் மிதமான வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
இந்நிலையில், காயம் பட்ட பகுதியில் கடுமையான வலி அல்லது தொடர்ந்து அதிகரிக்கும் வீக்கம், கை அல்லது காலை அசைக்க முடியாத நிலை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியமாகும். குறிப்பாக தலை, வயிறு அல்லது நெஞ்சுப் பகுதியில் பலமான அடி ஏற்பட்டிருந்தால், வெளிப்புற அறிகுறிகள் குறைவாக இருந்தாலும் உட்புற காயம் இருக்கக்கூடியதால் மருத்துவரை அணுகுதல் அவசியம்.