தென்னிந்தியத் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் புதிய போஸ்டரைத் திரைப்படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். நவரத்திரி மற்றும் ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு, இரசிகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் இந்தச் சிறப்புப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கையில் திரிசூலத்துடன், கம்பீரமான அம்மன் அலங்காரத்தில் நயன்தாரா வீற்றிருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
முன்னதாக வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக இத்திரைப்படம் அமைகின்றது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) சார்பில் டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிக்கும் இத்திரைப்படத்தை, நகைச்சுவை மற்றும் ஆன்மீகக் கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான சுந்தர் சி இயக்கி வருகின்றார். இதனால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு திரை உலகிலும், இரசிகர்களிடையேயும் மேலும் அதிகரித்துள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பண்டிகைக் காலத்தில் குடும்பத்தோடு கண்டு மகிழக்கூடிய சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக 'மூக்குத்தி அம்மன் 2' அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.