37 Views
ராவல்பிண்டி, முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணியை 37 ஓட்டங்களால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அணியின் சல்மான் ஆகா 90 பந்துகளில் 107 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். 306 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு பவன் ரத்நாயக்க 79 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 60 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் பெற்று நம்பிக்கையளித்தனர். எனினும், ஏனைய வீரர்களிடமிருந்து எதிர்பார்த்த ஓட்டப் பங்களிப்பு கிடைக்காததால் இலங்கை அணியால் வெற்றியைப் பெற முடியவில்லை. 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 268 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ஈஷான் மாலிங்க நான்கு விக்கெட்டுகளையும், அசித்த பெர்னாண்டோ மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். துடுப்பாட்டத்தில் சில வீரர்கள் சிறப்பாகச் செயற்பட்ட போதிலும், இறுதிக்கட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தமை இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதித்தது. இதன் மூலம் 37 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.