சீனாவில் விவசாயப் பணிகளை எளிதாக்கும் வகையில், Honghu T70 என்ற தானியங்கி மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தை உழுதல், விதைகளை விதைத்தல், பயிர்களுக்கான மருந்துகளைத் தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பணிகளை இந்த வாகனம் தானாகவே மேற்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.
105 kWh திறன் கொண்ட மின்கலத்தையும், 90 குதிரைத்திறனையும் கொண்ட இந்த வாகனம், ஒருமுறை மின்னேற்றம் செய்தால் சுமார் 4 முதல் 7 மணி நேரம் வரை இயங்கக்கூடியது. மேலும், GPS மற்றும் உணரிகளின் உதவியுடன் இரவு நேரங்களிலும் துல்லியமாக விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டீசல் எரிபொருளுக்கான செலவைக் குறைப்பதுடன், கார்பன் வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்த இந்தத் தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய தானியங்கி வாகனங்கள் எதிர்கால விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.