முடி உதிர்வுப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையக்கூடிய புதிய மின்னணுப் பீச் ஒன்றைச் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ‘Detangle’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சாதனம், சாதாரண தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், மின்தூண்டுதல் மற்றும் சிகிச்சை மூலக்கூறுகளை முடி வேர்களுக்குக் கொண்டு சேர்க்கும் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு, Nature Communications அறிவியல் இதழில் நவம்பர் 3ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி முடி உதிர்வு ஏற்பட்ட எலிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 28 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் சுமார் 98 சதவீதம் முடி மூடல் பதிவாகியுள்ளது. இதே பரிசோதனையில் Minoxidil மருந்தைப் பயன்படுத்திய எலிகளில் சுமார் 70 சதவீதம் முடி மூடல் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மின்தூண்டுதலுடன் சிகிச்சை மூலக்கூறுகளையும் இணைத்துச் செயல்படுத்துவது இந்த முடிவுகளுக்குப் பங்களித்துள்ளதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
எனினும், இந்தப் புதிய தொழில்நுட்பம் இதுவரை எலிகளில் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில், வழுக்கைத் தலையில் முடியை மீண்டும் வளர்க்கும் உறுதியான தீர்வாக இதனைக் கருத முடியாது. எதிர்கால மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளே இந்தக் கண்டுபிடிப்பின் உண்மையான பயனைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.