சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஆராயும் நோக்கில், அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய புதிய ஆய்வுத் திட்டத்தை Apple நிறுவனம் ஆரம்பித்துள்ளது. OpenEvidence என்ற மருத்துவ AI தளத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கு அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய பதில்களை வழங்குவதன் நம்பகத்தன்மை ஆராயப்படவுள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்பவர்கள் விரும்பினால், தங்களின் உடற்பயிற்சி, தூக்கப் பழக்கங்கள், இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல்நலத் தரவுகளையும் பகிர முடியும். ஒரு வருடத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆய்வு, மக்கள் மருத்துவத் தகவல்களைப் பெறுவதில் AI எவ்வாறு உதவுகிறது என்பதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆய்வின் முடிவுகள் எதிர்காலத்தில் Apple நிறுவனத்தின் Health செயலி மற்றும் Siri ஆகியவற்றில் புதிய AI மருத்துவ வசதிகளை உருவாக்க உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், AI வழங்கும் மருத்துவத் தகவல்கள் எப்போதும் சரியானவை எனக் கருத முடியாது என்பதால், உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.