தென்னிந்தியத் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை ஸ்ரீலீலா, அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்து மிக ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். திரையுலகில் நுழைந்த ஆரம்பக் காலத்தில் தான் எடுத்த சில முடிவுகள் குறித்தும், அவசரப்பட்டு ஒப்பந்தம் செய்த திரைப்படங்கள் குறித்தும் அவர் சற்று வருத்தத்துடன் பேசியுள்ளது தற்போது சினிமா வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
தனது திரைப்பயணத்தின் ஆரம்பக் கட்டம் குறித்துப் பேசுகையில், "எனது இளம் வயதில், என் திரைப்பயணத்தைப் பொறுத்தவரை நான் சில தவறுகளையும், தவறான முடிவுகளையும் எடுத்துவிட்டேன்" என்று ஸ்ரீலீலா கூறியுள்ளார். மேலும், "என்னைத் தேடி வந்த எல்லா திரைப்படங்களிலும் கையெழுத்திட்டேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும், சில திரைப்படங்களைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.