60 Views
தெற்காசியாவின் முதலாவது Air Dome கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் (Port City Colombo) நிறுவப்பட்டுள்ளது. சுமார் 4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளக நிகழ்வு மண்டபம், எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதற்கான சில கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடைய வேண்டியுள்ளன.
இந்த மண்டபம் சர்வதேச மாநாடுகள், கண்காட்சிகள், வணிகக் கூட்டங்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட சர்வதேச நகரங்களில் காணப்படும் இத்தகைய வசதிகளை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என CHEC Port City Colombo நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷலாக விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு துறைமுக நகரில் நிரந்தர மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் அமைக்கப்படும் வரை இந்த Air Dome இடைக்கால வசதியாகப் பயன்படுத்தப்படவுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள நிரந்தர மையத்தில் 4,000 பேர் அமரக்கூடிய உள்ளக பல்நோக்கு மண்டபமும், 5,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய வெளிப்புற நிகழ்வுப் பகுதியும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.