மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன் பல பெண்களுக்கு முதலில் எழும் அச்சம் தான் மார்பகத்தை முழுவதுமாக அகற்ற வேண்டியிருக்கும் என்பதுதான். ஆனால் மருத்துவ அறிவியல் இன்று கூறுவது வேறு. மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் மார்பகத்தை அகற்றுவது கட்டாயமல்ல.
புற்றுநோய் எந்த கட்டத்தில் உள்ளது, அதன் அளவு என்ன, அது மார்பகத்தின் எந்தப் பகுதியில் உள்ளது உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து, பல பெண்களுக்கு மார்பகத்தைப் பாதுகாத்தபடியே புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் நோய் கண்டறியப்பட்டிருந்தால், புற்றுநோயுள்ள பகுதியை மட்டும் அகற்றி, மீதமுள்ள மார்பகத்தைப் பாதுகாக்கும் அறுவை Breast Conservation Surgery முறையைப் பயன்படுத்த முடியும். ஆனால் இது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகச் சாத்தியமில்லை என ஆய்வுகள் கூறுகின்றது.
சரியான உடல் எடையைப் பராமரித்தல், தினசரி உடற்பயிற்சி செய்தல், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை உண்ணுதல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பது போன்றவை இந்த நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
மார்பகத்திலோ அல்லது அக்குள் பகுதியிலோ ஏதேனும் கட்டி, வீக்கம் அல்லது தோல் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் Mammogram பரிசோதனை செய்து கொள்வது மிக நல்லது.