பெற்றோருக்குப் புதிய தொலைபேசி வாங்கிக் கொடுக்கும்போது அதன் விலை, Camera, Processor ஆகியவற்றை மட்டும் கவனிக்காமல், அவர்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, நீண்ட நேரம் நீடிக்கும் Battery, எழுத்துகளைத் தெளிவாகப் படிக்க உதவும் பெரிய திரை மற்றும் சத்தமாகக் கேட்கக்கூடிய Speaker ஆகியவை முக்கியமானவை.
மேலும், பயன்படுத்துவதற்கு எளிதான Software, தேவையற்ற விளம்பரங்கள் குறைவாக இருப்பது, நீண்டகால Software Updates மற்றும் அருகிலுள்ள Service Centre வசதி ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.
தொலைபேசியை வழங்குவதற்கு முன்பு தேவையான செயலிகளை நிறுவி, எழுத்துகளின் அளவை அதிகரித்து, முக்கியமான தொடர்பு எண்களைச் சேமித்துக் கொடுப்பது பெற்றோரின் பயன்பாட்டை எளிதாக்கும். அதேவேளை, OTP மற்றும் PIN போன்ற இரகசியத் தகவல்களை யாருடனும் பகிரக்கூடாது என்பதையும் அவர்களுக்கு எடுத்துரைப்பது அவசியமாகும்.