உலக கிண்ண கனவுகளோடு களம் காணும் இலங்கை கிரிக்கெட் அணி!எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ம் திகதி ஆரம்பமாகவுள்ள 11 வது உலக கிண்ண போட்டித் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இறுதி 15 பேர் கொண்ட அணி விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிகமானவர்களால் ஊகிக்கப்பட்ட ஊகங்களோடு ஒத்ததாகவே இந்த அணி அமைந்திருக்கின்றமை இலங்கை அணியின் ரசிகர்களுக்கு திருப்தியைக் கொடுத்திருக்கிறது.
1996 ம் ஆண்டு அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மார்க் டெய்லர் தலைமையிலான அவுஸ்ரேலிய அணியை தோற்கடித்து முதல் தடவையாக கிரிக்கெட் உலக கிண்ணத்தை சுவீகரித்தது.
இதற்கு பின்னர் இலங்கை அணி 2007,2011 ஆகிய இறுதி 2 உலக கிண்ண போட்டித் தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு வந்து தோற்றுப் போனமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான நிலைமையில் தான் இலங்கையின் தேர்வாளர்களால் கிண்ணத்தை கைப்பற்றும் வல்லமையை கொண்ட ஓர் அணியாக மத்தியுஸ் தலைமையில் இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

1.அஞ்சேலோ மத்தியுஸ் (அணித் தலைவர்)
2.லகிறு திரிமான்ன (உதவி அணித் தலைவர்)
3.திலகரத்ன டில்ஷான்
4.குமார் சங்ககார
5.மஹேல ஜெயவர்தன ,
6.தினேஷ் சந்திமால்,
7.திமுத் கருணாரத்ன ,
8.ஜீவன் மென்டிஸ்,
9.திஸ்சாரா பெரேரா,
10.சுரங்க லக்மால்,
11.லசித் மாலிங்க ,
12.தம்மிக்க பிரசாத்,
13.நுவான் குலசேகர,
14.ரங்கன ஹேரத்,
15.சசித்திர சேனநாயக்க

கடந்த 2011 ம் ஆண்டு உலக கிண்ண இறுதிபோட்டியில் இந்திய அணிக்கெதிராக தோல்வியை தழுவிய அணியில் விளையாடிய அஞ்சேலோ மத்தியுஸ்,திலகரத்ன டில்ஷான்,குமார் சங்ககார ,மஹேல ஜெயவர்தன ,திஸ்சாரா பெரேரா,லசித் மாலிங்க ,நுவான் குலசேகர,ரங்கன ஹேரத் ஆகிய 8 வீரர்கள் இம்முறையும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த அணியை பொறுத்தவரையில் பிரதான வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளமை இலங்கை ரசிகர்களுக்கு ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த செப்டெம்பர் மாதம் உபாதையின் நிமித்தம் அவுஸ்ரேலியாவில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட மலிங்க, அதற்கு பின்னர் இடம்பெற்ற இந்திய அணிக்கெதிரான 5 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுக்க முடியாத நிலையில் அத்தனை போட்டிகளிலும் இலங்கை அணி மோசமான தோல்வியை தழுவியது.
அதற்கு பின்னர் இலங்கைக்கான சுற்றுலாவை மேற்கொண்ட இங்கிலாந்து அணிக்கெதிரான 7 ஒருநாள் போட்டிகளிலும் இவரால் பங்கேற்க முடியாமல் போனாலும் இலங்கை அணி சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்தை 5-2 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டது.
ஆனால் இலங்கை அணியின் துல்லியமான ,நம்பிக்கைக்குரிய பந்து வீச்சாளரான லசித் மலிங்க இல்லாத நிலையில் இலங்கை அணி பங்கெடுத்த போட்டிகளில் இலங்கையின் பந்துவீச்சு பலமிழந்து இருந்தமையை யாராலும் மறுக்க முடியாததே!

மலிங்க தனி ஒருவராக அணிக்கு வெற்றிகளை தேடிக் கொடுத்தார் என்ற கருத்து இல்லாவிட்டாலும் மிக முக்கியமான கட்டங்களில் ஓட்டங்களை கட்டுபடுத்துதல் +விக்கெட்டுகளை தகர்த்தல் என்ற அடிப்படையில் ஓர் ஆயுதமாக மலிங்க பயன்படுத்தப் பட்டு அணி தோல்வியின் விளிம்பில் இருந்த தருணங்களிலும் வெற்றியை தேடிக் கொடுத்தவர்.
ஆயினும் உலக கிண்ண போட்டிகளுக்கு முன்னர் நியூசிலாந்து அணிக்கெதிரான 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி 2 போட்டிகளில்தான் மலிங்கவால் மீளவும் போட்டிகளில் பங்கெடுக்க முடியும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
எது எப்படியாயினும் பூரண உடற்தகுதி நிலை பெற்று மலிங்க உலக கிண்ண போட்டிகளில் இலங்கையின் வெற்றிகளுக்கு உறுதுணை புரிவார் என்று நம்பலாம்.
இதைவிடவும் இலங்கையின் இன்னுமொரு பிரதான வேகபந்து வீச்சாளர் நுவான் குலசேகர இங்கிலாந்து அணிக்கெதிரான இலங்கை அணியிலிருந்தும் ஓரக்கட்டப்பட்ட நிலையிலேயே இப்போது இவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு மீளவும் குலசேகரவுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கபட்டுள்ளது.

சிலவேளைகளில் மலிங்காவின் உபாதை தொடர்ந்து அவரால் முழுமையான பங்களிப்பை அணிக்கு கொடுக்க முடியாமல் போனால் அதற்கு ஈடாக ஒரு அனுபவ பந்துவீச்சாளராக குலசேகரவின் பங்களிப்பு அணிக்கு தேவையானதுவே!
இந்த 2 பிரதான வேகப்பந்து வீச்சாளர்களோடு சேர்த்து அண்மைய நாட்களில் இலங்கையின் வேகப்பந்து வீச்சில் நம்பிக்கையை கொடுத்துவரும் தம்மிக்க பிரசாத்(22 போட்டிகள்) மற்றும் உபாதையிலிருந்து மீண்டு மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் கலக்கும் சுரங்க லக்மால்(29 போட்டிகள்) ஆகிய வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்களாக அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
வேகப்பந்து வீச்சு வீசக்கூடிய சகலதுறை வீரர்களாக அணித்தலைவர் மத்தியுஸ்,திஸ்சாரா பெரேரா ஆகிய வீரர்கள் அணியில் இருக்கின்றமை வேகபந்துக்கு சாதகாமான ஆடுகளங்களில் நல்ல பலன் கிடைக்குமென எதிர்பார்க்கலாம்.
சுழல் பந்து வீச்சாளர்களை பொறுத்த வரையில் முக்கிய தெரிவாக ரங்கன ஹேரத்,மற்றும் சச்சித்திர சேனநாயக்க ஆகியோரோடு சேர்த்து சுழல்பந்து சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிசும் அணியில் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இலங்கைக்கு எப்போதும் போல் உலக கிண்ண போட்டிகளில் சிக்கலை கொடுத்து நிற்கும் மத்திய வரிசைக்கு சரியான வீரர்களை தேர்ந்தெடுப்பதில் இலங்கையின் தேர்வாளர்கள் கடுமையான சிக்கலை இம்முறையும் எதிர்கொண்டனர்.
கடந்த 2011 ம் ஆண்டு உலக கிண்ண அணியின் மத்திய வரிசையில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட திலான் சமரவீர,சாமர சில்வா,சாமர கப்புகெதர ஆகிய வீரர்களால் இலங்கையின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் பெருமளவில் பங்களிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணத்தால் இலங்கையின் தேர்வாளர்கள் இந்த விடயத்தில் அதிக அக்கறைப்பட்டனர். கித்ருவன் வித்தானகே ,திலின கண்டம்பி,அஷான் பிரியஞ்சன்,சீக்குகே பிரசன்னா ,சத்துரங்க டி சில்வா,என்று பலருக்கும் வாய்ப்புக்களை கொடுத்தும் பலனற்றுப் போன நிலையில் இறுதியாக திரிமான்ன ,மற்றும் சந்திமால் ஆகிய வீரர்களையே மத்திய வரிசை வீரர்களாக தேர்வு செய்திருக்கின்றமை வரவேற்கத்தக்கதே.
கடந்த ஆண்டு முழுவதும் இவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புக்களை கொடுக்காது இவர்களை அணிக்குள் சேர்ப்பதும் ,விலக்குவதுமாய் விசப்பரீட்சை மேற்கொண்ட தேர்வாளர்களுக்கு இப்போதாவது நிலையான நேர்த்தியான புத்தி வந்திருக்கின்றமையை பாராட்டலாம்.

இலங்கையின் தேர்வாளர்கள் தோற்றுப் போன இன்னுமொரு விடயம் தான் அணிக்கு நிரந்தர ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரை கண்டுபிடிக்க முடியாமல் போனமை.
குட்டி சனத் என்று அழைக்கபட்ட குசல் ஜனித் பெரேராவுக்கு அளவுக்கு அதிகமான வாய்ப்புக்களை கொடுத்து பார்த்தும் சரியான ஒரு வீரரை அடையாளப்படுத்த முடியாமல் போயிருக்கிறது.உப்புல் தரங்க மீது இலங்கையின் தேர்வாளர்கள் அவ்வளவு நம்பிக்கையை வைக்கத் தவறிவிட்டனர்.
ஏற்கனவே இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்டத்தில் நம்பிக்கைதரும் மஹேல- தான் ஆரம்ப வீரராக தன் இறுதிக் காலகட்டத்தில் ஆட விரும்புகிறேன் என்று சொல்லியதையும் கூட இலங்கை தேர்வாளர்கள் கண்டுகொள்ளாத நிலையில் இப்போது மாற்று உக்தி இல்லாத நிலையில்தான் மஹேல ஆரம்ப வீரராக உலக கிண்ண போட்டிகளில் ஆடப்போகின்றார்.
திமுத் கருனாரத்னவை மேலதிக ஆரம்ப வீரராக அணியில் இணைத்தாலும் கூட இவருக்கான வாய்ப்புக்கள் பெரியளவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.
எது எவ்வாறாயினும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அணி தற்போதைய நிலையில் ஒரு சீரான அணியாகவே நோக்கப்படும் நிலையில்,அடுத்தடுத்து இரண்டு உலக கிண்ண இறுதிப் போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கும் இலங்கை அணி இம்முறை நம்பிக்கையோடு நடைபோடுமென நம்பியிருக்கலாம்.
*தில்லையம்பலம் தரணீதரன் 2015.01.07