தேசிய அனர்த்தம் ஒன்று இடம்பெறும் போது, துரித நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சாக் உறுப்பு நாடுகளுக்கு இடையே கைச்சாத்தான ஒப்பந்தத்தை உரிய முறையில் அமுல்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்தியா தலைமை தாங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தம் ஒன்று ஏற்படும் போது அதனை முன்கூட்டியே அறியும் வகையிலான உபகரணங்கள் மூலம் தகவல்களைப் பெற்று ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என 'ரைம்ஸ் ஒப் இந்தியா' தெரிவித்துள்ளது.
இதற்கு அமைய வெள்ளம், சூறாவளி மற்றும் சுனாமி போன்ற விடயங்கள் தொடர்பான முன்கூட்டிய தகவல்களைப் பெற்று ஏனைய சாக் உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும்.
தற்போது நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாக இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போல, ஏனைய நாடுகளில் ஏற்படும் அனர்த்தத்தின் போதும் இந்தியா உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னர், இலங்கை உட்பட ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாக்கிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியா ஆகிய உறுப்பு நாடுகள் அனர்த்தம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.