நாளைய தினம் நடைபெறவுள்ள மே தினத்துக்கு இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மாத்திரம் நாளையதினம் 17 மேதினக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டம் கொழும்பு ஹயிட் பார்க்கில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் பொரெல்லை கெம்பல் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் கொழும்பு பீ.ஆர்.சீ மைதானத்திலும், ஜனநாயக மக்கள் முன்னணியின் கூட்டம் கொட்டாஞ்சேனையிலும் நடைபெறவுள்ளன.
அதேநேரம் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம், மக்கள் ஐக்கிய முன்னணி, சமாஜவாதி மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் கூட்டங்களும் கொழும்பில் நடைபெறவுள்ளன.
இதேவேளை கொழும்புநகரில் நடைபெறுகின்ற மே தின கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள், தங்களின் உணவு மற்றும் குடிபானங்களை பெற்றுக் கொள்ளும் வியாபார நிலையங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன் நகரை அசுத்தப்படுத்த வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இடம்பெறவுள்ள மே தின கூட்டங்களில் பங்குபற்றுகின்ற மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்பொருட்டு 2 ஆயிரத்து 800 காவற்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் பல வீதிகள் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
நாளை மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரையில் ரீ.பி.ஜயாமாவத்தை, டீ.ஆர்.விஜேவர்தனமாவத்தை, வொக்சோல் வீதி - டோசன் வீதி சந்தி முதல் இப்பன்வல வரையில் எப்.ஆர்.சோனநாயக்க மாவத்தையில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
அத்துடன் நாளை பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரையில் தர்மபால மாவத்தை பார்க் வீதி சந்தியில் இருந்து லிப்டன் சுற்றுவட்டம் வரையிலும், பேஸ்லைன் வீதி பொரலை சந்தியில் இருந்து தெமடகொட வரையிலும் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
அத்துடன் மாலிகாவத்தை - ப்ரதீபா மாவத்தை, பஞ்சிகாவத்தை சந்தி முதல் ஜும்மா சந்தி வரையில் பேஸ்லைன் வீதி - கிருளபனை ஹைலெவல் வீதி சந்தி முதல் நாராயென்பிட்ட பார்க் சந்தி வரையில் நாளையதினம் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலெவல் வீதி - பலபொக்குன வீதி சந்தி முதல் ஹெவ்லொக் வீதி - டிக்மென் வீதி சந்தி வரையில் நாiளை பிற்பகல் இரண்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
அத்துடன் நாளைய பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரையில் யூனியன் பிரதேசம், கொம்பனித்தெரு சந்தி முதல் லிப்டன் சுற்றுவட்டம் வரையில் வாகனங்களின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நாளை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் கிருலபனை - துட்டுகெமுனு மாவத்தை மற்றும் பலபொக்குன வீதி, மருதானை வீதி - மருதானை சந்தியில் இருந்து பொரெல்ல சந்தி வரையான பகுதியும் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்று காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.