உழைக்கும் தொகையில் சிறு பங்கு பணத்தொகையை சமூக செயற்பாடுகளுக்கு செலவு செய்வது பிரபலங்களின் வழக்கம். அதிலும், திரைத்துறை சேர்ந்த நடிகர் நடிகைகள் இந்த விடயத்தில் முன்னிலை வகிப்பவர்களாக உள்ளனர். சமூக அக்கறை கொண்டவர்களாக தம்மை காட்டிக்கொண்டாலும், ஒரு வகையில் அங்கேயும் அவர்களை பற்றி பொதுவெளியில் எல்லோரும் பேசிக்கொள்ள வேண்டும் என்ற தனிப்பட்ட நலனும் இல்லாமல் இல்லை.
பெரும்பாலும் நடிகைகளை பொறுத்தவரைக்கும் அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களுடைய வளர்ச்சி முன்னேற்றத்தில் தங்கள் பங்களிப்பைச் செய்வது அனைவரும் அறிந்ததே. த்ரிஷா போன்ற நடிகைகள் விலங்குகள் நல அமைப்பின் செயற்பாடுகளில் தாமும் பங்கெடுத்து தெருவோர நாய்களில் அக்கறை காட்டுவார்கள். வேறு சில நடிகைகள் சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை வளங்களில் பாதுகாத்தல் போன்ற சமூக செயற்பாடுகளில் ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர்.
இப்படியாக நடிகைகளின் பங்களிப்பு உள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் வன விலங்குகள் நலன் சார்ந்த வேலைத்திட்டமொன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுடன், வன விலங்குகள் நிறைந்த வண்டலூர் மிருகக்காட்சிசாலையிலுள்ள 2 புலிகளை தத்தெடுத்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக மாறியிருக்கின்றார்.
இந்தியாவின் தமிழ்நாடு - வண்டலூர் வனஜீவராசிகள் பூங்காவில், தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பறவைகள் மற்றும் வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பூங்காவை நிர்வகிக்கும் தரப்பினருக்கு பிரதான பிரச்சனையாகக் காணப்படும், விலங்குகளை வளர்ப்பதில் ஏற்படும் செலவுகளுக்கு முகம் கொடுப்பதில் ஏற்படும் சிரமத்தை குறைத்து பொதுமக்களின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
வண்டலூர் வனவிலங்குகளை பொதுமக்களும் தத்தெடுத்து வளர்க்கும் திட்டம் 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தமது பங்களிப்பை இதுவரை காலமும் வழங்கி வருகின்றனர். இந்தநிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் தற்போது விலங்குகளை தத்தெடுக்கும் திட்டத்தில் இணைந்துள்ளார்.
நேற்றையதினம் உலக வனஜீவராசிகள் தினம் என்பதால், அதனை முன்னிட்டு பொதுமக்களிடம் வன விலங்குகள் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நினைப்புடன் வண்டலூர் பூங்காவுக்கு நேரில் சென்ற நடிகர் விஜய் சேதுபதி, அங்குள்ள வன உயிரினங்களை பார்த்து மகிழ்ந்ததுடன், அங்குள்ள ஆதித்யா மற்றும் ஆர்த்தி ஆகிய பெயர்களையுடைய 2 வங்கப்புலிகளை 6 மாத காலம் பராமரிப்பதற்கான முழுமையான செலவுகளை தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறி தத்தெடுத்துக் கொண்டார். அத்துடன், குறித்த 6 மாதத்தில்
2 வங்கப் புலிகளுக்குத் தேவையான உணவு செலவீனத்துக்கான தொகையாக 5 லட்சம் இந்திய ரூபா பணத்துக்கான காசோலையையும் விஜய் சேதுபதி வழங்கியுள்ளார்.
இது இப்படியிருக்க, இந்தத் திட்டத்தில் தானும் இணைந்தமை பற்றி கூறுகையில், "நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் வண்டலூர் மிருகக்காட்சிசாலைக்கு வந்து விலங்குகளை பார்த்தேன். அந்தக் காலத்தில், விலங்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்பட்டது. ஆனால் தற்போது 2500ற்கு மேற்பட்ட விலங்குகள் இருப்பதாக இங்குள்ள நிர்வாகிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், பூங்காவை சுற்றி பார்க்க வருகின்ற பொது மக்களுக்காக பல்வேறு வசதி வாய்ப்புகளும் செய்யப்பட்டுள்ளன.
வன விலங்குகள் நிறைந்த காடு ஒன்றினுள் சென்று வந்த அனுபவம் இங்கு வந்தபோது கிடைத்திருக்கின்றது. இந்த விலங்குகளைப் பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகின்றது. பொதுமக்களும் பெருமளவில் இங்கே வருகை தந்து இங்கிருக்கும் வன ஜீவராசிகளை பார்ப்பதால், மன இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சியான மன உணர்வைப் பெறலாம்" என்று கூறி மக்களின் பங்களிப்பையும் கோரி நிற்கின்றார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.