திரையுலகப் பிரபலங்களை பொறுத்தவரைக்கும் சர்ச்சைகளுக்கு எப்போதுமே பஞ்சம் இருப்பதில்லை எனலாம். எப்போதுமே தம்மை ஊடக வெளிச்சத்தில் வைத்துக் கொள்வதற்காக பிரபலங்களும் இப்படியான சர்ச்சைகளை கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு புதியதொரு சிக்கலில் மாட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்னிந்தியத் திரையுலகான 'டொலிவூட்' எனப்படும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான மோகன் பாபு, தனது மகன் விஷ்ணு மஞ்சுவை ஹீரோவாக்கி தயாரித்த திரைப்படம் "சலீம்". தெலுங்கு திரைப்பட இயக்குனர் Y.V.S சௌத்ரி இயக்கிய இந்தப் படத்துக்கு இயக்குனருக்கான சம்பளத்தின் ஒரு பகுதி தொகைக்காக, "சலீம்" படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான மோகன் பாபுவினால் Y.V.S சௌத்ரிக்கு வழங்கப்பட்ட காசோலை செல்லுபடியாகவில்லையாம்.
மோகன் பாபுவினால் வழங்கப்பட்ட காசோலையை வங்கியில் வைப்புச் செய்த இயக்குனருக்கு பணம் கிடைக்கவில்லை. மாறாக, காசோலை செல்லுபடியாகவில்லை என்ற பதிலே கிடைத்த நிலையில், இது பற்றி இயக்குனர் Y.V.S சௌத்ரி படத்தின் தயாரிப்பாளரான நடிகர் மோகன் பாபுவிடம் தெரிவித்தும் அதனை அவர் கண்டுகொள்ளாத நிலையில், இயக்குனரால் தயாரிப்பாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்றையதினம் அறிவிக்கப்பட்டதாகவும், அதன்படி தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபுவிற்கு ஒரு வருட காலம் சிறைத் தண்டனையுடன் கூடியதான 41 லட்சம் இந்திய ரூபா அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளியாகும் செய்திகள் இப்படியிருக்க, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக பதிவொன்றை பகிர்ந்திருக்கும் நடிகர் மோகன் பாபு, தன்மீது சில தொலைக்காட்சிகள் காழ்ப்புணர்வுடன் கூடிய பொய்யான செய்திகளை வெளியிடுவதாகவும், அதனை நம்ப வேண்டாமென்றும் கூறியுள்ளார். அத்துடன், எந்த வித பிரச்சனையும் இன்றி தற்போது ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தான் உள்ளேன் என்று பதிவிட்டிருக்கின்றார்.