திரையுலகத்தைப் பொறுத்தவரைக்கும் இலகுவான உள் நுழைவிற்கும் அறிமுகத்திற்கும் திரையுலகப் பின்னணி மிகவும் இன்றியமையாதது எனினும், இந்தத் துறையில் தம்மைத் தக்கவைப்பதற்கு துறைசார் திறமையும், விற்பன்னமும் மட்டுமே கொடுக்கும் என்பது எந்தளவிற்கு நிஜமோ, இவை எல்லாவற்றையும் விட அதிர்ஷ்ட்டம் உள்ளவர்களே உச்சம் தொட்டார்கள் என்பது கசப்பான
உண்மை.
இந்த கசப்பான உணர்வை கற்றுணர்ந்த பல திரையுலகு சார்ந்தோரில் இன்றும் தனது போராட்ட குணத்தால் விடாமுயற்சியுடன் தனது திரையுலக இருப்பைத் தக்கவைத்து முன்னேறிக்கொண்டிருப்பவர் நடிகர் அருண் விஜய். என்னதான் பெரியதொரு திரையுலகப் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து அறிமுகமானாலும், நடிப்புத் திறமையும் தன்னம்பிக்கையும் அமைந்திருந்தாலும் இன்றுவரை தனக்கென ஒரு இடத்தை தக்கவைக்க முடியாமல் திண்டாடிக்கொண்டே இருக்கின்றார் இந்த அதிர்ஷ்டமற்ற நடிகர்.
இருந்தும், சமீப காலமாக அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற ஆரம்பித்துள்ள நிலையில், அண்மையில் வெளியான "தடம்" திரைப்படம் எல்லோரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெற்றியை அடுத்தடுத்த படங்களிலும் கொடுத்துவிடும் முனைப்புடன் "பொக்ஸர்" எனும் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கின்றார் அருண் விஜய்.
சிறந்த உடற்கட்டழகை பராமரித்து வரும் நடிகரான அருண் விஜய் சண்டைக்காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர். அதிலும், "பொக்ஸர்" திரைப்படம் சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் என்பதால் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார் அருண் விஜய்.
இயக்குனர் விவேக் உருவாக்கும் இந்தப் படத்தில் நிஜ குத்துச்சண்டை வீராங்கனையும் நடிகையுமான ரித்திகா சிங் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றார். இந்தப் படத்திற்கான சண்டைக்காட்சிகளுக்கான பயிற்சியை நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமான "ஏழாம் அறிவு" படத்தில் அவருக்கு வில்லனாக நடித்த ஜானி வியட்நாம் நாட்டில் வைத்து கற்றுக் கொடுக்கின்றாராம். இதனை சமூக வலைத்தளமொன்றின் தனது பிரத்தியேகப் பக்கமொன்றில் குறிப்பிட்டிருக்கும் நடிகர் அருண் விஜய், ஜானியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருக்கின்றார்.