வித்தியாசமான கதைகளை கொண்ட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் செல்வராகவன், தம்பி தனுஷை வைத்து ‘காதல் கொண்டேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.சோனியா அகர்வால் இந்தப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் பின்னர், அவரே செல்வராகவனின் நிஜ நாயகியாகவும் மாறியிருந்தார் என்பது எல்லாருமே அறிந்த விஷயம், இதில் யுவன் சங்கர்ராஜா இசையமைத்திருந்தார். இவருடைய இசையில் இந்த படம் மட்டுமல்லாமல், படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
இந்த வெற்றியைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய "7ஜி ரெயின்போ காலனி", "புதுப்பேட்டை", "யாரடி நீ மோகினி" ஆகிய படங்களுக்கு யுவன் இசையமைத்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
கொஞ்சநாளில் தமிழ்சினிமாவில் எல்லாரிடமும் தொற்றும் கருத்து முரண்பாடு நோய் இவர்களையும் தொற்றிகொண்டது.இதனால் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட யுவன் திடீரென விலகினார்.இந்தநிலையில்"ஆயிரத்
தில் ஒருவன்", "மயக்கம் என்ன", படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். அதன் பிறகு "இரண்டாம் உலகம்" படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, பின்னணி இசையை அனிருத் கவனித்திருந்தார்.
தற்போது இருவருக்குமான கருத்து முரண்பாடு சுமுகமடைந்த நிலையில், செல்வராகவன் அடுத்ததாக இயக்கும் புதியபடத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளதாக ஒரு செய்தி கசிந்திருக்கிறது.நடிகர்கள் பற்றிய விபரங்கள் வெளிவராத நிலையில், இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை அரவிந்த் மேற்கொள்ளவுள்ளாராம்.
இந்தநிலையில், செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவனும், இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாக கூறியிருப்பது இந்த செய்தியின் உண்மை தன்மையை மேலும் உறுதி செய்திருக்கிறது.
மீண்டும் ஒரு வித்தியாசமான கதைகொண்ட படத்திற்காக காத்திருப்போம்.. எதிர்பார்ப்பு ஏமாற்றமாகாமல் இருந்தால் சரி....