Australian new keeper from UAE - அவுஸ்திரேலியாவின் புதிய விக்கெட் காப்பாளர் அரபு தேசத்திலிருந்து !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
13,014 Views
மத்திய கிழக்கின் அனல் பறக்கும் பாலை ஆடுகளங்களில் பாகிஸ்தானிய அணியை கிரிக்கெட் போட்டிகளில் எதிர்கொண்டுவரும் அவுஸ்திரேலிய அணிக்கு நேற்றைய தினம் புதிய விக்கெட் காப்பாளரையும் வழங்கியுள்ளது அரபு தேசம்.
ஆமாம், அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானிய A அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நான்கு நாள் பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடி வருகிறது. மூன்றாம் நாளான நேற்று தங்கள் விக்கெட் காப்பாளர் ப்ரட் ஹடினை கொளுத்தும் பாலை வெயிலில் இருந்து காப்பாற்றும் நோக்கில் அவுஸ்திரேலியப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் விக்கெட் காப்பாளரான சக்லைன் ஹைடருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
பெருமையோடும், மகிழ்ச்சியோடும் இந்த அரிய வாய்ப்பை ஏற்றுக்கொண்ட ஹைடர் மிகச் சிறப்பாக விக்கெட் காப்பில் ஈடுபட்டிருந்தார்.
மிட்செல் ஜோன்சன், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் அதிவேகப்பந்துகளுக்கு மிக லாவகமாக காப்பில் ஈடுபட்ட ஹைடர், அந்த வேகப் பந்துகள் தன் கையில் ஏற்படுத்திய வீக்கங்களை மிகப் பெருமையாகப் பின்னர் காட்டியிருந்தார்.
அத்துடன் நேதன் லயோனின் சுழல்பந்து வீச்சில் ஒரு அபார பிடியையும் எடுத்திருந்தார்.
ஹைதரின் விக்கெட் காப்புக் காணொளி
இந்த அரிய வாய்ப்பு தனது கடும் உழைப்புக்குக் கிடைத்த பரிசு என்று பெருமையோடு கூறிக்கொண்ட ஹைடர், அவுஸ்திரேலிய வீரர்கள் தன்னோடு மிக அன்பாக நடந்துகொண்டதாகவும், தனக்கு அனுபவக்கல்வியை பெற்றுத் தந்ததாகவும் கூறியுள்ளார்.
முழுநேர வங்கி ஊழியரான ஹைடர், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கியில் வேலை செய்த பின்னர், பாகிஸ்தானிய முன்னால் வீரரான ஆகிப் ஜாவேத்தின் கீழான ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணிக்காக நள்ளிரவு வரை கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபடும் ஒரு கடுமையான உழைப்பாளி.
இப்படியான வாய்ப்புக்கள் தன்னை மேம்படுத்தும் என நம்புவதாக ஹைடர் மகிழ்ச்சியடைகிறார்.
டெஸ்ட் அந்தஸ்து இல்லாத ஒரு அணியின் வீரருக்கு கிடைத்த இவ்வாய்ப்பு போல ஹைடருக்கு மேலும் பல உயர்வுகள் கிட்டட்டும்.
அதுசரி, அவசர அவசரமாக அவுஸ்திரேலிய குடியுரிமை ஒன்று அவுஸ்திரேலியாவில் தயாராகிறதோ யார் கண்டார்.
கிரிக்கெட் அவுஸ்திரேலிய இணையத்தள செய்தியின் அடிப்படையில் - ARV