18ஆவது IPL கிரிக்கெட் தொடர் கடந்த இரு மாதங்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி RCB அணி கிண்ணத்தை வென்றது.
RCB வெற்றி பெற்றதைக் கோலாகலமாகக் கொண்டாட பெங்களூருவில் வெற்றிப் பேரணி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பேரணியில் இலட்சக்கணக்கான இரசிகர்கள் கலந்துகொண்டதன் காரணமாக சன நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ், "அடுத்தமுறை இதேபோன்று வெற்றிக் கொண்டாட்டம் நடக்கும் போது மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அமைதியாக இருப்பதே நல்லது. ஏனெனில் கொண்டாட்டங்களை விட உயிர் தான் மிகவும் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.