இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தத் தொடரில் அற்புதமான துடுப்பாடத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் மொத்தம் 754 ஓட்டங்களை குவித்துள்ளார். இதன் மூலம், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கரிடம் இருந்து தட்டிப்பறித்தார்.
சுப்மன் கில் மேலும் 21 ஓட்டங்கள் எடுத்து இருந்தால், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கவாஸ்கரிடம் (774) இருந்து தட்டிப்பறித்து இருக்கலாம். ஆனால் அந்த அரிய வாய்ப்பை கில் கோட்டை விட்டார். இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு நேற்றைய போட்டியின் முடிவில் சுனில் கவாஸ்கர் 2 சிறப்பு பரிசுகளை வழங்கினார்.
தனது கையொப்பமிட்ட ஒரு சிறிய சிவப்பு தொப்பி மற்றும் சட்டை ஒன்றை பரிசாக வழங்கினார். இது குறித்து கவாஸ்கர் கூறியது "சிறப்பு. என்னுடைய இன்னொரு சாதனையையும் முறியடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.
இது என்னிடமிருந்து உங்களுக்கு சிறிய பரிசு. ஒரு சட்டை மற்றும் என்னுடைய கையொப்பமிட்ட தொப்பி. இந்த தொப்பியை சிலருக்கு மட்டுமே நான் கொடுப்பேன். வாழ்த்துகள், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் " என்று கூறினார்.