'16 வயதினிலே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாரதி ராஜா. அவரது முதல் படத்திலேயே ரஜினி, கமல், ஸ்ரீதேவி என முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படத்தை இயக்கினார்.
தொடர்ந்து பல படங்களை இயக்கிய இயக்குநர் பாரதிராஜா, தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் திடீரென காலமானார். மகன் மரணம் பாரதி ராஜாவை மிகவும் நிலைகுலைய செய்தது. இதை தொடர்ந்து மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து பின்னர் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் 80 வயதை கடந்துள்ள பாரதிராஜா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாரதிராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.