உலகக் கால்பந்து இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ஆரம்பமான 23ஆவது உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் ஆர்ஜென்டினா அணியானது தொடர் வெற்றிகளால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த முறை கிண்ணத்தை சுவீகரித்த ஆர்ஜென்டினா, இறுதியாக இடம்பெற்ற எகிப்துடனான போட்டியின் 79ஆவது நிமிடம் வரை 2-0 எனத் தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், ஆட்டத்தின் இறுதியில் எஞ்சியிருந்த 11 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து இரசிகர்களுக்கு மெய்சிலிர்க்கும் வெற்றியைப் பரிசளித்தது.
இந்தத் தொடரில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் லியோனல் மெஸ்ஸி நாளை இடம்பெறவுள்ள ஸ்விட்சர்லாந்து அணிக்கெதிரான கால் இறுதிப் போட்டியிலும் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்ஜென்டினாவை அரையிறுதிக்குக் கொண்டு செல்வார் என இரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கையில் உள்ளனர்.
நாளை இடம்பெறவுள்ள கால் இறுதி ஆட்டங்களில், இலங்கை நேரப்படி நள்ளிரவு 2.30க்கு நோர்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும், காலை 6.30க்கு ஆர்ஜென்டினா மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய அணிகளும் மோதவுள்ளன.