'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, சென்னை நகரம் முழுவதும் நேற்று இரவு முதலே திருவிழாக்கோலம் பூண்டது. திரைப்படம் வெளியாகும் நாளுக்காக பல மாதங்களாக காத்திருந்த இரசிகர்கள், வெளியீட்டுக்கு முந்தைய இரவே திரையரங்குகள் முன்பு திரண்டு உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகள் அனைத்தும் பிரமாண்ட கட்-அவுட்கள், வண்ணமயமான பேனர்கள், மலர் மற்றும் மின்னொளி அலங்காரங்களால் ஜொலித்தன. விஜய்யின் கட்-அவுட்களுக்கு இரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, மலர் தூவி, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேளதாளங்கள், பட்டாசுகள், ஆட்டம்-பாட்டம் என திரையரங்குகள் முன்பு கொண்டாட்டம் களைகட்டியது.
இன்று வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் காட்சியை காண இரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளை நோக்கி திரண்டுள்ளனர். விஜய்யின் இறுதித் திரைப்படம் என்பதால், படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.