24 Views
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் யுங்காஸ் மலைக்காடுகளில், இதுவரை அறிவியலால் அடையாளம் காணப்படாத புதிய காட்டுப்பூனை இனம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘Leopardus tilcayo’ என அறிவியல் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய காட்டுப்பூனைக்கு, அப்பகுதி மக்கள் பாரம்பரியமாக அழைக்கும் ‘Tilcayo’ என்ற பெயரே சூட்டப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு சுமார் 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 38 காட்டுப்பூனைகளின் மரபணு தகவல்களை ஆய்வு செய்ததில், இதுவரை ஒரே இனமாகக் கருதப்பட்ட ‘Tiger Cat’ குழுவில் ஐந்து தனித்துவமான இனங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் ஒன்றுதான் தற்போது புதிதாக அடையாளம் காணப்பட்ட Tilcayo ஆகும்.
சுமார் 46 CM நீளமும் 1.4 கிலோகிராம் எடையும் கொண்ட இந்தப் பூனை, வீட்டு பூனையைவிட சிறியதாக காணப்படுகிறது. பழுப்பு நிற உடலில் வட்ட வடிவ புள்ளிகள் காணப்படுகின்றன. அறிவியல் உலகில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று முறையாக அடையாளம் காணப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.