உரிக்க உரிக்க உள்ளே எதுவுமே இல்லாததால்தான் சிலரை திட்டும்போது வெங்காயம் என்ற சொல்லை பயன்படுத்துகின்றார்கள். ஆனால் உணவிலும், மருத்துவத்திலும் பெரும் பயனைத் தருவது இந்த வெங்காயம்.
பொதுவாக வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவது சகஜம் தான். இந்தநிலையில் இவ்வளவு கஷ்டப்பட்டு, கண்ணீர் விட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு வெங்காயத்தை நாம் ஏன் உரிக்க வேண்டும்? எதற்கு கஷ்டப்பட வேண்டுமென நினைத்திருக்கிறார்கள் ஜப்பானிய விவசாய அறிவியல் துறையைச் சேர்ந்தவர்கள்.
இந்த கஷ்டம் அடுத்த தலைமுறையினருக்கும் தொடர வேண்டாம் என்று நினைத்த ஜப்பானிய விவசாய அறிவியல் துறையினர், உரித்தாலும், நறுக்கினாலும் அருகில் இருப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்காத நவீன ரக வெங்காயத்தை கண்டுபிடிப்பதில் தற்போது வெற்றியடைந்துள்ளனர்.
வெங்காயத்தில் கத்தி படும் வேளையில் அது வெளியேற்றும் வேதிக்கலவை தான் இந்த கண்ணீருக்கான காரணம் என்பதை கண்டறிந்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், அந்த வேதிக்கலவை நீக்கப்பட்ட வெங்காய வித்துக்களை சமீபத்தில் உருவாக்கினர். அவற்றை நட்டு-வளர்த்து இந்த நவீன வகை வெங்காயங்களை விளைவித்து தற்போது சாதனை படைத்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நவீன வெங்காயத்திற்கான காப்புரிமையை ஜப்பானிய நிறுவனம் ஒன்று தமதாக்கிக்கொண்டுள்ளதாம். இருந்தாலும், இந்த வெங்காயம் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வருமா? என்பது தொடர்பாக அந்த நிறுவனம் எந்தவித கருத்துகளையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
*S.G.R