இந்த நிலையில், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தானிடம் சிக்கியதை அடுத்து இந்தியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஒரு சம்பவத்தை சார்ந்தவாறே கடந்த 2017 ஆம் ஆண்டில் வெளியான ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் கதையும் அமைந்திருந்தது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் கார்த்தி நடித்திருந்தார். அதில் அவர் விமானப்படை வீரராக வந்தார். அவர் எல்லை தாண்டும் போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி விடுவார். பின்னர் அங்கு கடும் சித்திரவதைகளை அனுபவிக்கும் அவர், பாகிஸ்தானியர்களின் பிடியில் இருந்து தப்பி இந்தியாவுக்கு திரும்புவதை இயக்குனர் காட்டியிருந்தார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தி ராணுவ வீரர்களிடம் கடுமையான பயிற்சிகளை பெற்றார். குறிப்பாக தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் உள்ள அபிநந்தன் தந்தையும், அவருக்கு பயிற்சி அளித்திருந்தார்.
தனக்கு பயிற்சி அளித்தவரின் மகனே, அந்த படத்தின் கதையைப் போல பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியிருக்கும் சம்பவத்தை அறிந்து கார்த்தி பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பாக கார்த்தி தனது டுவிட்டர் தளத்தில் உருக்கமான பதிவை இட்டுள்ளார். “ஒவ்வொரு இந்தியரின் உணர்விலும் இன்று ராணுவ வீரர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்த தேசமும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் பின்னால் நிற்கிறது. நமது ராணுவ வீரர்களின் துணிச்சலான இதயமும் தியாகமுமே நமது நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
இந்திய விமானப்படையின் மிகச் சிறந்த விமானிகளை நான் சந்திக்க நேர்ந்தது அதிர்ஷ்டவசமானது. அவர்களில் பலரை நான் படத்திற்காக சந்திக்க நேர்ந்த போது மிகவும் பெருமைப்பட்டேன். அது எனக்கு கிடைத்த பெரிய கௌரவம். நமது வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்'' என, நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார்.