குறிப்பாக கோடைக் காலத்தில், இதய நோயாளிகள் மற்றும் முதியவர்களின் ஆரோக்கியம் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த கோடை காலத்தில் உடலின் நீர்ச்சத்து அதிகளவில் குறைவதனால், பல்வேறு உடல் உபாதைகளும், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
கோடை காலத்தில் வரும் அதிக வெப்பத்தால், நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் பாதிக்கிறது. அதனால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடுவதால், தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்பும் உண்டாகும் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் இதய நோயாளிகள் இந்த காலப்பகுதியில் கவனமாக இருக்க வேண்டும். வெயிலில் அதிக வேலைகளை செய்யக்கூடாது. பகலில் நடமாடும் போது குடைகளை பயன்படுத்த வேண்டும்.
இக்காலத்தில் தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது நல்லது. பருத்தி ஆடைகள் வியர்வையை நன்கு உறிஞ்சும் தன்மை கொண்டது.
கோடைகாலத்தில் டீ,கோப்பி, இரசாயன குளிர்பானங்களை தவிர்த்து மோர், இளநீர், பதநீர், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ணுவது உடலுக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.
வெயிலில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் குளிர்சாதன பெட்டிகளில் ஜில்லென்று இருக்கும் தண்ணீரை எடுத்து குடிக்க கூடாது. சிறிது நேரம் கழித்து மண்பானை தண்ணீரை அருந்தலாம்.
இதன்மூலம் கோடைகால உடல் உபாதைகளை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ முடியும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.