ஆண், பெண் என்ற வேறுபாடின்றி உடலை கட்டுக் கோப்பாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள அனைவருமே விரும்புவர். இருந்தும் பலரால் வாயைக் கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதுடன் ஆரோக்கியம் பேணுவதற்கான உடற்பயிற்சியை மேற்கொள்வதிலும் சோம்பேறித்தனம் காட்டுவதால் தொப்பை உருவாகி விடுகின்றது.
உண்ணும் உணவில் உள்ள சத்துக்களில், கொழுப்பு முதலில் வயிற்றையும் அதனை சூழவுள்ள இடைப்பகுதியிலுமே அதிகம் சேர்கின்றது. இதன் காரணமாகவே தொப்பை வயிறு ஏற்படுகின்றது. அது மட்டுமல்லாமல், ஒரு சில வேறு காரணங்களால் வயிற்றில் உள்ள தசைகள் தொய்வு அடைவதாலும் கூட தொந்தி வயிறு உண்டாகின்றது.
பெண்களை கொடியிடையாள் என்று கவிதைகள் இலக்கியங்களில் எல்லாம் வர்ணித்திருப்பார்கள். ஏனெனில், மெல்லிய கோடி போன்ற இடை கொண்டவர்கள் பெண்கள். எப்போதும் மெல்லிடை கொண்ட சிறு வயிற்றுடன் கூட ஸ்லிம் ஆக இருக்க வேண்டும் என்றே பெண்கள் விரும்புகின்றனர். இருந்தும், தற்கால துரித உணவு மற்றும் உணவுப் பழக்க வழக்கம் என்பவற்றின் காரனனமாக பல பெண்களுக்கு மெல்லிடை என்ற கனவு கை கூடாமலேயே போய்விடுகின்றது.
உணவுப் பழக்க வழக்கம் ஒருபுறம் மெல்லிடை கனவை தகர்த்துவிட, மறுபுறம் பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வயிற்றுத் தசை தொய்வடைவதால் வயிறு பெருத்து விடுகின்றது. முதல் காரணமான உணவுக் கொழுப்பினால் உண்டாகும் தொந்தி பிரச்சினைக்கு உணவுக்கட்டுப்பாடு மிக மிக அவசியம் என்பதுடன் வயிற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை மேற்கொள்வது அதை விட முக்கியம்.
வயிற்றுப்பகுதியில் உள்ள சதையை குறைப்பதற்கு பல இலகுமுறை பயிற்சிகள் உள்ளன. அவற்றை தினமும் செய்து வந்தாலே தொந்தி வயிற்றை எளிதில் இயல்புநிலைக்கு கொண்டுவந்து விடலாம். அவை எவை என தெரிந்து கொள்வோமா....???
முதலில் நேராக படுத்துக்கொண்டு காலை மடக்கி வைக்கவும். கைகளை தலையின் பின்புறம் வைத்துக் கொண்டு மெதுவாக மேல் எழுப்பி வர வேண்டும் முடிந்த அளவு மேல் நோக்கி வர வேண்டும். ஆனால் கால்களை அசைக்க கூடாது.
இதை கிரஞ்சஸ் எனக்கூறுவர். வயிற்று தசை பகுதிகளுக்கான வெகு முக்கிய பயிற்சி இது. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து பத்து முறை செய்துவிட்டு 20 வினாடிகள் ஓய்வு எடுத்த பின்னர் மீண்டும் பத்து முறை என தொடர்ந்து 2 செட்கள் செய்வதன் மூலம் படிப்படியாக வயிற்று பகுதியில் உள்ள சதையை குறைக்கலாம். ஆரம்பத்தில் 2 செட்களில் ஆரம்பித்து படிப்படியாக 5 செட்கள் வரை அதிகரித்துக்கொள்ளலாம்.