தமிழ்நாட்டின் திரையுலக வரலாற்றில் தனக்கென்று ஓர் தனி இடம் வைத்துக்கொண்டது மட்டுமல்லாமல், அரசியலிலும் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருநாள் பிரதமர் நாற்காலியில் அமர்வார் என்று எதிர்பார்த்த தன்னம்பிக்கையின் அடையாளம் 'இரும்புப் பெண்மணி' ஜெயலலிதா ஜெயராம்.
அரசியல் பின்னணி எதுவுமற்ற சாதாரணமான ஒரு குடும்பத்திலிருந்து வந்து, திரையுலகில் கதாநாயகியாக சாதித்ததுடன், அதன்மூலம் தன் அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து எத்தனையோ எதிர்ப்புகள், தடைகள், சூழ்ச்சிகள் எல்லாம் உடைத்தெறிந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக 6 முறை பதவியிலமர்ந்து வியப்பில் அனைவரையும் விழிவிரிய வைத்த பெண்ணான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பல மொழிகளிலும் படமாகத் தொடங்கியுள்ளது.
முதல்வர் பதவியில் இருக்கும்போதே உயிர்நீத்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் தமிழ்த் திரையுலகம் சார்ந்து 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா, A.L.விஜய் மற்றும் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர்ஷினி போன்றோர் ஈடுபட்டிருந்த நிலையில், "த அயர்ன் லேடி" என்ற பெயரில் அந்தப் படத்தை இயக்கப்போவதாகவும், படத்தில் ஜெயலலிதாவாக வாழப்போவது நடிகை நித்யா மேனன் என்றும் உத்தியோகபூர்வமாக அறிவித்தார் இயக்குனர் பிரியதர்ஷினி.
இது இப்படியிருக்க, "தலைவி" என்ற பெயரில் A.L.விஜய் இயக்கும் படத்திற்காக 'பொலிவூட்' முன்னணி நடிகைகளான ஐஸ்வர்யா ராய், கங்கனா ரணாவத், வித்யா பாலன் ஆகியோர் போட்டியில் இருந்த நிலையில், ஜெயலலிதா வேடமேற்கப்போவது நடிகை கங்கனா ரணாவத் என்பது முடிவாகியுள்ளது.
தமிழில் வெளியாகவுள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கான போட்டிநிலை இப்படியிருக்க, தெலுங்குத் திரையுலக இயக்குனர்களும் தமது பங்கிற்கு தெலுங்கு மொழி படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதிலும், சர்ச்சைகளில் சிக்குவதில் புகழ்பெற்ற தெலுங்குத் திரையுலகின் இயக்குனர் ராம் கோபால் வர்மா தன்னுடைய கிறுக்குத்தனத்தை காட்டாத தவறவில்லை. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை தானும் படமாக்கப்போவதாகவும், அந்தப் படமானது ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை முதன்மைப்படுத்தியதாகவே அமையும் என்றும் அறிவித்ததுடன், "சசிகலா" என்ற பெயரில் சசிகலாவின் படத்தையே படத்தின் முதற்பார்வையிலும் வெளியிட்டார்.
ராம்கோபால் வர்மாவின் செயற்பாடு இப்படியிருக்க, "சசிலலிதா" என்ற தலைப்பில் மற்றுமொரு திரைப்படமும் போட்டியில் வரிசை கட்ட வந்திருக்கின்றது. தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி என்பவர் தானே தயாரித்து இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கே "சசிலலிதா" என்ற பெயர் வைத்ததுடன், இரண்டு பாகமாக திரைக்காணவிருக்கும் இந்தப் படத்தின் ‘பர்ஸ்ட் லுக்‘ எனப்படும் முதற்பார்வையை நேற்றையதினம் வெளியிட்டுள்ளார்.
இவர்களின் கூத்து இவ்வாறிருக்கும் நிலையில், முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குனரான கெளதம் வாசுதேவ் மேனனும் "QUEEN" என்ற தலைப்பில் இணையத் தொடராக வெளிவரும் வகையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக அறிவித்திருப்பதையும் குறிப்பிடலாம்.