பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவரும், "எங்கேயும் எப்போதும்" திரைப்படத்தின் மூலம் தன்னையும் ஒரு இயக்குனராக அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டவருமான சரவணன், கன்னடத் திரையுலகில் புனித் ராஜ்குமார் நடித்த "சக்ரவியூகா" படத்தை இயக்கியதன் மூலம் அங்கும் தன்னை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டவர்.
தொடர்ந்து தமிழில் "இவன் வேற மாதிரி" மற்றும் "வலியவன்" போன்ற படங்களை இயக்கியிருந்த நிலையில், விபத்து ஒன்றை எதிர்கொண்ட இயக்குனர் சரவணன் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் திரைக்களம் மீண்டுள்ள நிலையில், புதியதொரு அதிரடித் திரைக்கதையை படமாக்கும் முடிவுடன் வந்திருப்பதாகவும், கதாநாயகியை முக்கியத்துவப்படுத்தியாக குறித்த திரைக்கதை பின்னப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாக வளர்ச்சிபெற்றுவரும் 'லைக்கா ப்ரொடக்க்ஷன்' தயாரிப்பில் வரவிருக்கும் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா அதிரடி நாயகியாக மிரட்டப்போகும் நிலையில், த்ரிஷாவுடன் குறித்த படத்தில் இணைந்து நடிக்கவுள்ள ஏனைய துணை நடிக நடிகையர்களுக்கான தேர்வு நடைபெற்றுவருவதாக படக்குழுவிற்கு நெருக்கமானவர்களிடமிருந்து செய்திகள் கிடைக்கின்றன. இதில், மிக முக்கியமாகக் குறிப்பிடக்கூடிய விடயம் என்னவெனில், இந்தப் படத்திற்கான மூலக்கதை சரவணனுடையதாயினும், திரைக்கதையை எழுதுவது அவரது குருவான ஏ.ஆர். முருகதாஸ் என்றும், படத்தை இயக்குவது சரவணன் தான் என்றும் தெரியவந்துள்ளது