அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்திய அற்புதமான ஆற்றல்கள் பாபர அஸாமுக்கு இந்த விருதை கிடைக்க வைத்துள்ளது.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 196 ஓட்டங்களைக் குவித்து அந்த டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடிவடையச் செய்ததுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 390 ஓட்டங்களை மொத்தமாக குவித்தார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மார்ச் மாதத்தில் நடைபெற்ற 2 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முறையே 57 ஓட்டங்களையும் 114 ஓட்டங்களையும் பெற்று அந்தத் தொடரிலும் சிறந்த பங்காற்றியிருந்தார்.
மேற்கிந்தியத் தீவுகளின் க்ரெய்க் ப்றத்வெய்ட், அவுஸ்திரேலியாவின் பெட் கமின்ஸ் ஆகியோரும் இந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தபோதிலும் பாபர் அஸாமின் ஆற்றல்கள் அவர்களை விஞ்சுவதாக அமைந்தன.
அத்துடன் இந்த விருதை இரண்டு தடவைகள் வென்ற முதல் வீரர் என்ற பெருமைக்கும் சாதனைக்கும் பாபர் அஸாம் உரித்தானார். அவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதமும் இந்த விருதுக்கு சொந்தக்காராகியிருந்தார்.
இதேவேளை அதி சிறந்த வீராங்கனைக்கான விருதை ரஷேல் ஹேய்ன்ஸ் வென்றெடுத்தார். நியூஸிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் 429 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார். அவரது துடுப்பாட்ட சராசரி 61.28 ஆகும்.
ஆரம்ப வீராங்கனையான ரஷேல் ஹேய்ன்ஸில் இந்த மொத்த எண்ணிக்கையில் ஒரு சதம், 2 அரைச் சதங்கள் அடங்கியிருந்தன.
இங்கிலாந்துக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் 130 ஓட்டங்களைக் குவித்த ரஷேல் ஹேய்ன்ஸ் அவுஸ்திரேலியாவின் வெற்றி அலையை ஆரம்பித்துவைத்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியிலும் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ரஷேல் ஹேய்ன்ஸ் 85 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரது அற்புத துடுப்பாட்டத்தின் பலனாக சகல லீக் போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றிபெற்று மிக இலகுவாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதுடன் அரை இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளை துவம்சம் செய்திருந்தது.
தொடர்ந்து இந்த மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற இங்கிலாந்துடனான இறுதிப் போட்டியிலும் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிபெற்று 7ஆவது தடவையாக உலக சம்பியனாகியிருந்தது.