ஆடவருக்கான டென்னிஸ் தரவரிசையில் முதலாம் இடத்திலுள்ள நோவாக் ஜொக்கோவிச்சை பெல்கிரேடில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட ரஷ்ய வீரர் அண்ட்ரே ரூப்லெவ், சேர்பிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
தனது சொந்த மண்ணில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் இறுதிப் போட்டியில் விளையாடிய ஜோக்கோவிச்சுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
.சேர்பிய நாட்டு டென்னிஸ் இரசிகர்கள் முன்னிலையில் இறுதிப் போட்டியில் விளையாடிய ரூப்லெவ், தீர்மானமிக்க கடைசி செட்டில் முழுமையான ஆதிக்கம் செலுத்தி ஒரு புள்ளியையும் விட்டுக்கொடுக்காமல் மிக இலகுவாக வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டார்.
இருவருக்கும் இடையிலான முதலாவது செட்டில் அற்புதமாக விளையாடிய ரூப்லெவ் 6 - 2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்தார்.
2ஆவது செட்டில் இருவரும் கடுமையாக மோதிக்கொள்ள ஆட்டம் சமநிலை முறிப்புவரை நீடித்தது. அப் போட்டியில் இருவரும் மாறிமாறி புள்ளிகளைப் பெற்றவண்ணம் இருந்தனர்.
எவ்வாறாயினும் சமநிலை முறிப்பு முறையில் 7 (7) - 6 (4) என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற ஜொக்கோவிச் ஆட்ட நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.
இதனை அடுத்து தீரமானமிக்க 3ஆவது செட் கடுமையாகவும் சம அளவிலும் மோதிக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 3ஆவது செட்டில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய ரூப்லெவ் 6 - 0 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஜொக்கோவிச்சை வீழ்த்தி சம்பியன் ஆனார்.
இந்த சம்பியன் பட்டத்துடன் இந்த வருடம் மூன்றாவது சம்பியன் பட்டத்தை 24 வயதான ரூப்லெவ் சூடிக்கொண்டுள்ளார்