சுயாதீன இசைக் கலைஞனாக 'கட்சி சேர', 'ஆச கூட' போன்ற ஹிட் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற சாய் அபயங்கர், தற்போது தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைக்கும் பாரிய வாய்ப்புகளைப் பெற்று வருகின்றார்.
தனது பெற்றோர் திப்பு - ஹரிணி ஆகியோரின் இசைப் பாரம்பரியத்தைத் தாண்டித் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியுள்ள இவர், அட்லீ - அல்லு அர்ஜுன் இணையும் பிரம்மாண்டத் திரைப்படமான AA22, சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியின் 'கருப்பு', மற்றும் தனுஷின் 55-வது திரைப்படம் ஆகியவற்றிற்கு இசையமைக்கின்றார்.
அத்துடன் அண்மையில் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து 'பவழ மல்லி' என்ற பாடலையும் வெளியிட்டு இசைத் துறையில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தி வருகின்றார் .
இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசும் போது தான் ஒரு திரைப்படத்தில் கூட இசையமைக்காத போதே அட்லீ தனக்கு வாய்ப்பளித்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் சாய் "அட்லி அண்ணாவுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்," என்றார் .