'உலகநாயகன்' கமல் ஹாசன் மற்றும் நடிகை சரிதா தம்பதிகளின் மகளாகவும், பெரும் திரையுலகப் பின்னணியைக் கொண்டும் நடிப்புத்துறைக்குள் கால் பதித்த நடிகை ஸ்ருதி ஹாசன், பின்னணிப் பாடகி, நடிகை, இசைப் புலமை எனப் பல்துறைத் திறமை கொண்டவராக மிளிர்வதுடன், தமிழ் தவிர்ந்த பிற மொழிப் படங்களிலும் தனது முத்திரையை பதித்துவருகின்றார்.
திரைப் பிரபலங்களை பொறுத்தவரைக்கும் பொது விழாக்களில் விசேட விருந்தினர்களாக அவர்கள் அழைக்கப்படுவதும், கௌரவப்படுத்தப்படுவதும் வழமை. அண்மையில், வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘ரிவேரா 2019’ என்ற கலைநிகழ்ச்சி ஒன்றின் நிறைவு விழாவிற்கு நடிகை ஸ்ருதி ஹாசனும் அழைக்கப்பட,
அவரும் சந்தோஷமாக அந்த விழாவில் கலந்து கொண்டதுடன், அந்தக் கல்லூரியின் மாணவர்களுடன் தனது திரைத்துறை சம்பத்தப்பட்ட சில விடையங்களை பகிர்ந்துகொண்டார்.
அத்துடன், அந்தக் கல்லூரி மாணவர்களால் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கும், சுருதி ஹாசன் பொறுமையாகவும், மகிழ்ச்சியாகவும் பதில் வழங்கி மாணவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியிருந்தார்.
அந்த வேளையில், தென்னிந்தியத் திரையுலகின் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுடன் ஹிந்தி திரையுலகிலும் நடித்திருக்கின்றீர்கள்.
இந்த மூன்று மொழிகள் சார்ந்த பட உலகில் வேலை பார்த்ததில் எந்த மொழி சார்ந்த திரைத்துறையில் நடிப்பது இலகுவாகவும், சிறந்ததாகவும், சௌகர்யமாகவும் உங்களுக்கு தோன்றுகின்றது? என மாணவர்கள் கேள்வி ஒன்றை முன்வைத்தனர். அதற்குப் பதில் வழங்கிய சுருதி ஹாசன், ‘ஹிந்தியோ அல்லது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியோ... எதுவானாலும், அந்தத் துறையை சுமையாக நான் கருதுவதில்லை. நடிப்பை நேசித்து விரும்பிப் பணியாற்றுகின்றேன். அதனால், எதுவுமே அசௌகரியமாக எனக்குத் தோன்றுவதில்லை என்கிறார் ஸ்ருதி.
அதேவேளை, இணைந்து நடித்த நடிகர்கள் பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டபோது, ஒரு மாணவர் 'தல' அஜித் பற்றி கேள்வி ஒன்றை முன்வைக்கையில் அதற்குப் பதில் வழங்கிய ஸ்ருதி ஹாசன் "எனக்குப் பிடித்த நடிகர்கள் வரிசையில் மிகப் பிடித்த ஒருவர் அஜித், இதுவரை நான் சந்தித்ததில் மிகவும் பண்பான ஒரு நடிகர் அவர்தான்’ என்றும் கூறி 'தல' அஜித் புகழ் பரப்பியிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல், தமிழில் வெளிவந்த உங்களுக்குப் பிடித்த படம் எது எனக் கேட்கப்பட்டபோது, தனக்கு மிகவும் பிடித்த படம் "மகாநதி" என்று பதிலளித்த ஸ்ருதி, சிறந்த நடிகர் யார் எனக் கேட்டபோது தனது தந்தை ‘கமல்ஹாசன்’ என்று சட்டெனப் பதிலளித்தார். அதுமட்டுமல்லாமல், நடிப்பு, பாடல் பாடுவது, இசையமைப்பது என்று தான் பல துறைகளில் ஈடுபாடு காட்டிவந்தாலும் ரசிகர்களின் மனதை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு என்டர்டெயினர் ஆக இருப்பதே பிடிக்கும். அதைத்தான் மிகவும் விரும்புவதாகவும் சொல்கின்றார் நடிகை ஸ்ருதி ஹாசன்.