தென்ஆப்பிரிக்காவில் என்ஜினீயர் ஒருவர் விமானியாக சுமார் 20 வருடங்கள் பணியாற்றிய விடயம் தெரிய வந்துள்ளது.
வில்லியம் சாண்ட்லர் என்ற என்ஜினீயர் தென் ஆப்பிரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமான சவுத் ஆப்பிரிக்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்துள்ளார்.
இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கு குறித்த விமானி அண்மையில் செலுத்தித் சென்ற விமானம் பயணம் செய்தபோது, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை தொடருக்கு மேல் பறந்த சமயத்தில் அதிர்வு ஏற்பட்டது. அந்த அதிர்வை அவதானித்த விமானி , விமானத்தை வினோதமாக இயக்கிய விதம் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரை விசாரணை செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டுவிட்டது. காரணம் என்னவென்றால் குறித்த விமான நிறுவனத்தில் பணியாற்றும் வில்லியம் சாண்ட்லர், ஒரு விமானியே இல்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது.
மேலும் விமானத்தை செலுத்தும் லைசென்சும், குறித்த போலி விமானியிடம் இருந்திருக்கவில்லை. இவர் விமானம் ஓட்டுவதற்கு முன்னர், விமான என்ஜினீயராக பணியாற்றி உள்ளார். அந்த அனுபவத்தில் அவர் கடந்த 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, தன்னை ஒரு விமானியாக அடையாளப்படுத்தி விமானம் ஓட்டியமைக்காக அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இழப்பீடாக பெரும் தொகையை விமான சேவை நிறுவனம் கோரியுள்ளது.
மேலும் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க போவதாகவும் அறிவித்துள்ளது. இதனிடையே, சர்வதேச விமானங்களை இயக்கும் விமானிகள் ஏர்லைன் ட்ரான்ஸ்போர்ட் விமானி லைசென்சை பெறுவது கட்டாயமாகும். குறித்த லைசென்சை வருடா வருடம் புதுப்பித்துக்கொள்ளவும் வேண்டும். அத்துடன் உடல் தகுதி தேர்வுக்கும் விமானிகள் உள்வாங்கப்படுவார்கள். இப்படி இருக்க எப்படி இந்த நபர் விமானியாக 20 வருடம் பணியாற்றினார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.