வட இந்திய நடிகையாக இருந்தாலும் "உன்னாலே உன்னாலே" திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலக ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவர் நடிகை தனிஷா.
மின்சாரக்கனவு திரைப்படத்தில் நடித்த பொலிவூட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான கஜோலின் தங்கை தான் இந்த தனிஷா. ஹிந்தியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவருவதோடு ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ள இவர், இரண்டு நாயகிகளை சுற்றிப் பின்னப்பட்ட திரைக்கதையான "உன்னாலே உன்னாலே" படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக பங்கேற்று நடித்திருந்தார்.
இந்தநிலையில், அண்மையில் பொது நிகழ்வு ஒன்றில் பங்கெடுக்க அமெரிக்கா சென்றிருந்த நடிகை தனிஷா இனவெறியுடன் கூடிய அவமரியாதைக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. குறித்த துர்ப்பாக்கிய சம்பவம் தொடர்பில் நடிகை தனிஷா விபரிக்கையில், “ அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நியூயோர்க் நகரத்திற்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்வு நிறைவு பெற்றதும், நான் தங்குவதற்காக ஹோட்டல் ஒன்றிற்கு போனபோது, அங்கிருந்த ஒருவர் மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டார். அது மட்டுமல்லாமல் என்னை அருவருப்பாகவும் பார்த்தார்.
இப்படி கீழ்த்தரமாக நடந்துகொண்ட குறித்த நபரின் செயற்பாடுகள் முரட்டுத்தனமாகவும் இருந்தது. அவர்
என்மீது இனவெறியை காட்டினார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் நான் பொறுமையாக இருந்தேன். ஹோட்டல் ஊழியர் ஒருவரிடம் இதைப்பற்றி நான் சொன்னபோது, நான் பார்க்க வித்தியாசமாக இருந்ததால் அந்த நபர் அப்படி பேசியதாக அந்த ஊழியர் என்னிடம் கூறினார்.
முதல் முறையாக அமெரிக்காவில் இப்படியொரு இனவெறி அனுபவத்துக்கு நான் முகம் கொடுத்தேன். முன்பு ஒருபோதும் இப்படியொரு கேவலமான சம்பவத்தை எதிர்கொண்டதில்லை. நியூயோர்க் நகர நிகழ்விற்கு என்னுடன் வந்த தோழிகளும் குறித்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டனர். இப்படியான கேவலமான நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டியவை" என்கிறார் நடிகை தனிஷா.