கண்சிமிட்டும் நேரத்திற்குள் எண்ணவும் முடியாத விபத்துக்கள். எந்த நேரத்தில், எந்த நிலைமையில் விபத்துக்களை எதிர்நோக்குவோம் என்பதை நாம் அறியா விட்டாலும் , விபத்தை தவிர்த்துக்கொள்ள கூடிய வழிமுறைகளை தெரிந்து வைத்து கொள்வதால் ஓரளவு விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம்.
குவாட்டமாலா நாட்டில் மக்கள் நிறைந்த இருண்ட நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று மோதியதில் 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவாட்டமாலாவின் சோலோலா ( Guatemala Solola ) மாகாணத்தில் கடந்த புதன்கிழமை நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார். அதனை பார்ப்பதற்கு ஏராளமானோர் அங்கு கூடியுள்ளனர்.
அப்போது அவ்வழியாக கனரக வாகனம் ஒன்று மிக வேகமாக வந்து அங்கு கூடி நின்ற கூட்டத்தினர் மீது மோதியுள்ளது. பெரிதாக விளக்கொளியில்லாத அந்த பிரதேசத்தில் மக்கள் கூடியிருந்ததன் விளைவு, 18 பேரின் உயிர் பரிதாபமாக பறிபோயுள்ளது.
சோலோலா மாகாணத்தைச் சேர்ந்த நஹூலா நகராட்சி தீயணைப்புத்துறை செய்தித் தொடர்பாளர் செசிலியோ சாக்காஜ் தெரிவித்தத்தை மேற்கோள் காட்டி, fox news செய்தி நிறுவனம் இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இந்த விபத்தில் 30 பேர் பலியானதாகவும், அதற்கு தாம் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி ஜிம்மி மொரால்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இத்துயரச் சம்பவத்தில் பலியானோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளும் அரசு செய்யும்’ என தெரிவித்துள்ளார்.